சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தினமும் சுமார் 33.5 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 குடிநீர் திட்டங்கள், வடவள்ளி – கவுண்டம்பாளையம் மற்றும் ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் கடும் வெயில் காரணமாக அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.குறிப்பாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 50 அடியில் இருந்து தற்போது சுமார் 16.3 அடியாக குறைந்துள்ளது. இதனால் அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு 100 எம்.எல்.டி-யிலிருந்து சுமார் 47.5 எம்.எல்.டி-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக சராசரியாக 45 முதல் 50 எம்.எல்.டி வரை மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

இதன் விளைவாக, கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் சீராக இல்லாமல், சில பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை, சில இடங்களில் வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இந்த நிலையை சமாளிக்க பில்லூர் திட்டத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது.

மாநகராட்சியின் தகவலின்படி, தற்போது அனைத்து நீர் ஆதாரங்களிலிருந்தும் தினமும் சுமார் 330 எம்.எல்.டி தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாலும், கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.