கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமியை அவதூறு பேசி வருவது குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து அதிமுக எடுத்துரைத்தால், அதற்காக அண்ணாமலை வக்காலத்து வாங்குகிறார். தமிழகத்தில் நடைபெறும் இந்த கேலிக்கூத்தை பார்க்கும் போது, அண்ணாமலை ஒரு கோமாளி என நிரூபணம் ஆகிறது. எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவர் உலகம் அறிந்தவர். அப்படிப்பட்ட எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிட்டதில், இந்திய அரசுக்கு தான் பெருமை சேர்ந்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், நாகரீக அரசியல் செய்து வருகின்றன. அன்பு, நாகரிகம் நிறைந்த மண் தமிழகம். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பண்பை அண்ணாமலைக்கு அவரது குடும்பத்தினர் கற்றுக் கொடுக்க வேண்டும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அரவக்குறிச்சியில் ஜெயிக்க வைக்க வேண்டும் என இபிஎஸ் இடம் கைகூப்பி கும்பிட்டவர் அண்ணாமலை. பாஜக உறுப்பினர்களை மட்டும் தான் கும்பிட்டு ஏமாற்ற முடியும், தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. பிரதமர் மோடி தமிழகம் வந்த போதெல்லாம் அவருக்கு எதிராக பல முன்னெடுப்புகளை திமுக செய்தது. இது கூட தெரியாமல் திமுகவின் நாணயம் வெளியீட்டு விழாவில், அண்ணாமலை அக்கட்சி நிர்வாகிகளை கும்பிடு போட்டு வழிந்தார். திமுக அரசிற்கு ஆலோசனை வழங்கும் சுனில்லை, ரகசியமாக அண்ணாமலை சந்தித்தது ஏன்? பல ஊழல்களில் தழைத்து வரும் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டுமே.
அண்ணாமலைக்கு சவால்
விவசாயி என மார்தட்டும் அண்ணாமலை, விளை நிலங்களை சைட் போட்டு விற்றுக் கோடிகளை சம்பாதித்து வருகிறார். அரசியலில் சேர்ந்து குறுகிய காலத்தில், அண்ணாமலை இவ்வளவு சொத்து சேர்த்தது எப்படி? ஆடம்பர கார், வீடு போன்றவை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? அண்ணாமலை பணம், பணம் என்று அலைந்து கொண்டிருக்கிறார். என் மண் என் மக்கள் இயக்கம் மூலம் பண வசூல் செய்துள்ளார். கடந்த எம்.பி தேர்தலில், பண வசூல் செய்துள்ளார். அண்ணாமலை பண்ணையார் குடும்பத்தில் பிறந்து கஷ்டபட்டு படித்தேன் என்று மக்களை ஏமாற்ற நினைக்கிறார். 1 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யலாம், அண்ணாமலை வருவாரா? நான் சேலஞ்ச் செய்கிறேன். அண்ணாமலை அட்ரஸ் இல்லாத ஆளு. ஊடகம் தினமும் அவரை பேச வேண்டும் என்பது தான் அவருடைய நிலை. அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் அதை எதிர் கொள்வேன்.
2026 தேர்தல் அதிமுக? திமுக? என்பது தான். அதிமுக ஊழல் ஆட்சி என்பது 2021 கூட்டணி வைப்பது தெரியவில்லை? மத்திய அரசு வழங்கிய விருதுகள் போது தெரியவில்லை. நாட்டின் கடனை பிரதமர் ஏற்றி வைத்துள்ளார். பிரதமர் மகாராஷ்டிரா திறந்து வைத்த சிலை ஒரு வருடம் கூட தாங்காது. தப்பி தவறி ஆட்சிக்கு வந்தால் வந்தும், கூட்டணி பலவீனம் என்பதால் திமுகவை பிடித்து பாஜகவினர் தொங்கி வருகின்றனர். அண்ணாமலை கட்சிக்காரர் கிடையாது. யூ டியூப் இன்புளூசியர் தான். அண்ணாமலை மனநலம் குன்றியவர். அவருடைய இரண்டு பாஸ்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசி விவரித்த சிங்கை ராமசந்திரன் இந்தியில் பேசி அண்ணாமலையை விமர்சனம் செய்தார்.
தொழில் முதலீடு
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவில் பல ரவுடிகளை உறுப்பினர்களாக சேர்த்து விட்டு அண்னாமலை பண வசூல் ஈடுபடுகிறார். 10 வருட பஜக ஆட்சியில், இந்திய கடன் அதிகரித்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள் திறக்கப்பட்டன. அத்திக்கடவு - அவிநாசி திட்டம், டெல்டா பாதுகாப்பு ஆகிய பல திட்டங்கள் எடப்பாடி பழிச்சாமி முதல்வராக இருந்து செயல்படுத்தியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொழில் முதலீடுகள் இருக்க அமெரிக்கா செல்கிறார். கடந்த சுற்றுப்பயணங்களில் இதுவரை ஒரு முதலீடு கூட தமிழகத்தில் செய்யப்படவில்லை. அவர் அமெரிக்கா செல்வது எதற்கு என்று அனைவருக்கும் தெரிந்தாலும் கூட, அவர் மீண்டும் தமிழகம் வரும் காலம் வரை மக்களை அதிமுக பத்திரமாக பார்த்துக் கொள்ளும்” என்றார்.