தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுகவை விமர்சிப்பதிலேயே த.வெ.க அரசு கவனம் செலுத்துகிறது: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
கோவை, ஜூன் 1:
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பேசிய செந்தில் பாலாஜி, தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், தெற்கு தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முன்னுரிமை அளிப்பேன் என்று உறுதியளித்தார். திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை என குற்றம்சாட்டினார். அரசின் அமைச்சர்கள் தங்களது துறைகளை மேம்படுத்துவதை விட திமுகவை விமர்சிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் மகளிர் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், விளம்பர அரசியலில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
டாஸ்மாக் விவகாரத்தை குறிப்பிட்ட அவர், தேர்தலுக்கு முன் கடுமையாக விமர்சித்தவர்கள் தற்போது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை விளக்க வேண்டும் என்றார். மேலும், தொழில்துறை அமைச்சர் தொழிலாளர் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறினார்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விக்கு, அதுபோன்ற தகவல் தனக்குத் தெரியாது என்றும், அவர் கட்சி தொடங்கினால் அதுகுறித்து பின்னர் கருத்து தெரிவிக்கலாம் என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.
