மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட அதிமுக சார்பில், கோவை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல அதிமுக புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி அற்புதமான ஆட்சியை தந்தார். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு அவர் தந்தார். மக்கள் விரும்பும் ஆட்சியை தந்தவர். தொண்டர்கள் விருப்பப்படியும், எதிர்பார்த்தபடியும் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு இடைக்கால பொதுச்செயலாளராக வந்தது யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் பயம். எடப்பாடி பழனிசாமி உங்களில் ஒருவர். திமுகவை வீழ்த்தி, அம்மா ஆட்சியை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வேண்டும் என தொண்டர்கள் நினைத்தார்கள்.


திமுக ஆட்சியில் மக்களுக்கு எதாவது செய்திருக்கிறார்களா?. மக்களுக்கு எதுவும் செய்யாத ஆட்சியாக உள்ளது. காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. இதை எல்லாம் கவனிக்காமல் ஓபிஎஸ் உடன் சேர்ந்து, அதிமுக தொண்டர்களின் கோவிலான அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்துள்ளனர். இதற்கு காரணம் ஸ்டாலின். அதிமுக அலுவலகத்தை சீல் வைத்ததை டிவியில் பார்த்த போது, அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அதிமுக அலுவல கதவை செருப்புக் காலால் உதைத்தவர் விபத்தில் உயிரிழந்தார். திமுக அராஜகம் செய்து கொண்டிருக்கிறதுஎன அவர் பேசினார்.




இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சொத்துவரி, மின்கட்டணம், கட்டுமான பொருட்கள் விலைகளை உயர்த்தியுள்ளது. அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருந்தால், இந்த விலை உயர்வு வந்திருக்காது என மக்கள் பேசுகிறார்கள். திமுக அரசு மக்கள் விரோத போக்கை கைவிட்டு, விலை உயர்வை நிறுத்த வேண்டும்எனத் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி. வெங்கடாசலம் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது பேசிக் கொண்டிருந்த எஸ்.பி. வேலுமணி சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். உடனடியாக கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண