பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், உக்கடம், கோவை ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், “கழகங்கள் மறையட்டும்... இனி நம்ம கொடி பறக்கட்டும்... வெல்கம் அண்ணாமலை” என்ற வாசகங்களுடன் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில் நடிகர் ரஜினிகாந்தின் படமும் இடம்பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் நீண்ட காலமாக திராவிடக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், “கழகங்கள் மறையட்டும்” என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் அந்த முடிவை கைவிட்டிருந்தாலும், அவரது ரசிகர்களில் ஒரு பகுதியினர் அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் ஆன்மீக அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதனை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே அண்ணாமலையை முன்னிறுத்தி பா.ஜ.க. நிர்வாகிகள் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டி வந்த நிலையில், தற்போது ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் வெளியான இந்த போஸ்டர்கள் கோவை அரசியல் களத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
