கோவை மாவட்டம் பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொள்ளாச்சி நகரம் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமன் கலந்து கொண்டார். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ”தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். விலைவாசி ஏறியுள்ளது. விவசாயம் மற்றும் நெசவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் விவசாயம் செய்ய சிரமப்படுகின்றனர்.


பொள்ளாச்சி நகராட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள ஜோதி நகரில் திட்டசாலை 50 அடி சாலையை தனிநபர் ஆக்கிரமிப்புக்காக உறுதிபடுத்த நகராட்சியில் தீர்மானம் போடப்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதியாக மாற்றம் செய்ய உள்ளனர் என்பது கண்டிக்கத்தக்கது. இதுவரை நடைபெற்ற ஊழலில் தலையான ஊழல் ஆகும். திமுக முக்கிய புள்ளி பயன்படுவதற்காக இந்த மாதிரி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். பொள்ளாச்சி நகரத்தில் சட்ட ஒழுங்கு என்பது சரியாக கிடையாது. ஒரு போலீஸ் அதிகாரி மோட்டார் சைக்கிள் சென்று இரண்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது சட்ட ஒழுங்கு சரி இல்லை என்பதாகும். ஆட்சி மாற்றத்திற்காக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி 40 இடங்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.