முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என அழைக்கப்படும் இவர் சிறுவாணி என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அதிமுக நிர்வாகியாக இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கோவையில் அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாக செயல்பட்டதாக கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் மனு அளித்துள்ளார். அதில், "கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் லஞ்ச லாவண்யங்கள் நடைபெற்று பொதுமக்களின் வரிப்பணத்தை லட்சக்கணக்காவும், கோடிகளை தாண்டியும் மாஜி மந்திரி வேலுமணி மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்து விட்டனர். அத்திகடவு - அவிநாசி திட்டம், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், நொய்யல் புனரமைப்பு திட்டம், பாதாள சாக்கடை திட்டம், உக்கடம் மேம்பால பணிகள், பந்தயசாலை ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டம், சூயஸ் குடிநீர் திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலையம் பணிகள், சாலை, சாக்கடை பணிகள் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது. பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. அனைத்து கோவை மாநகராட்சி பணிகளிலும் 12 சதவீதம் கமிசனாக பெற்றுள்ளார். அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. அதிகப்படியாக கொள்ளையடித்த மாஜி அமைச்சர் வேலுமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கோவை மாநகரில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்துள்ளார். சில மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் ஒவ்வொரு திட்டங்களுக்கு 12 சதவீத கமிஷன் பெற்றுள்ளார். இதன் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு மற்றும் பந்தய சாலை பகுதி அழகுபடுத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. மற்ற பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. 1500 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. பொது மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன்" என அவர் தெரிவித்தார். முன்னாள் அதிமுக அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மீது இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இப்புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் கேட்ட போது, "அப்புகார் மனுவை பெற்றுள்ளோம். புகார் குறித்த ஆதாரங்களை கேட்டுள்ளோம். ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.