சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகா விஷ்ணு என்னும் பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர்.அவர், மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம், மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம் என்று பேசியுள்ளார். மறு பிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தில் பூமியில் இறங்கும் என்றெல்லாம் மகா விஷ்ணு கூறி இருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் இனையத்தில் வைரலாகின.


அமைச்சர் உறுதி


இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!" என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இனி சர்ச்சைக்குரிய வகையில் பேச்சாளர்கள் அரசுப் பள்ளிகளில் பேசுவது போன்ற சம்பம் நடைபெறாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தார்.




அறக்கட்டளையில் சோதனை


இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கு பணியில் இருக்கும் நபர்களிடம் மகாவிஷ்ணு குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் தற்போது மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் உள்ளதாகவும், தங்களை அவராகவே தொடர்பு கொண்டால் நாங்கள் பேசுவோம், இங்கிருந்து நாங்கள் அவரை தொடர்பு கொள்ள இயலாது என்றும் அங்கு பணி புரிபவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பரம்பொருள் அறக்கட்டளை மூலம் தினம்தோறும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு சுமார் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது எனவும், மேலும் இங்கு ஆண்கள் பெண்கள் என இருபாலரும் தியானம்  மூலம் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றும் போலீசார் விசாரணையில் அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.