கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த வழக்கில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு 4-வது காவல் பட்டாலியன் படைப் பிரிவில் கமாண்டன்ட் பதவியில் பணியாற்றி வந்த செந்தில்குமார் மீது அங்கு பணியாற்றும் பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பெண்களிடம் தவறான முறையில் பேசியதுடன், பணியிடத்தில் ஒழுங்குக்கு மாறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கோவையில் பட்டாலியன் அதிகாரி கைது

Continues below advertisement

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் உயரதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்து மூல புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

 

பாலியல் புகாரில் உயர் பதவியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.