நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்காக இரண்டு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக  செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினருக்கு 10 மணியும், அதிமுகவினருக்கு 11 மணிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாஜகவினர் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்ப தாமதமானதால், அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு கட்சியினரும் மாறி மாறி கோஷமிட்டனர். பின்னர் நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வந்த பின்பு ஊர்வலம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல் துறையோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




வாகனத்தை தாக்க முயன்ற அதிமுகவினரை காவல் துறையினர் கட்டுப்படுத்தியதை தொடர்ந்து, பாஜகவினரை வேகமாக செல்ல அறிவுறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஜகவினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.


காவல் கண்காணிப்பாளர் மீது புகார்


அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரத்தை குறிப்பிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று தெரிவித்து விட்டோம். இன்று ஊர்வலம் தொடங்க தாமதம் ஏற்பட்டதால் காவல்துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. கட்சியினரை தடியடி நடத்தி கலைத்ததில் காயப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணைய அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளோம். ஜனநாயகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் போது, இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் வருந்தத்தக்கது. காவல் துறை கண்காணிப்பாளர் களத்தில் இறங்கி தடியடி நடத்தி இவ்வளவு பிரச்சனையை உருவாக்கி விட்டார்.




காவல்துறையே தவறு செய்தாலும் அதை தவறு என சொல்ல கூடிய கட்சி பாஜக. இந்த சம்பவத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வேண்டும். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை காவலர்களை வீதிக்கு கொண்டு வந்து பிரச்சனையை ஏற்படுத்த விரும்பவில்லை. இதை காவல்துறையினர் சரியான முறையில் கையாண்டிருக்க வேண்டும். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். இந்தப் பிரச்சனை இங்கு நடக்கும் போது, தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தலைமை தேர்தல் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்கள். தடியடியில் காயமடைந்த தொண்டர்களும் புகார் அளித்துள்ளனர். இதை சட்டபூர்வமாக எதிர் கொள்கிறோம். ஆ.இராசாவோடு சண்டை போட எல்.முருகன் வரவில்லை. நீலகிரி மக்களை ஆ.இராவிடமிருந்து காப்பாற்ற வந்துள்ளார். மத்திய மந்திரியாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவர் மேற்கொண்டு வரும் பணிகள் எல்லோருக்கும் தெரியும். பிரதமர் தேர்தலின் போது வந்தாலும் சரி, தேர்தல் முடிந்த பிறகு வந்தாலும் சரி. ஆனால் முருகன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்றார்.