கோவை அருகே உள்ள புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. “மேலை சிதம்பரம்” என அழைக்கப்படும் இந்த திருத்தலத்தில் நடைபெற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்தமுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா, இந்த ஆண்டும் கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம்  நடைபெற்றது. காலை நேரத்தில் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள் “பட்டீசா… பட்டீசா… பேரூரா… பேரூரா…” என முழக்கமிட்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். அந்த முழக்கங்கள் பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். தக்கார் விமலா, கோவில் உதவி ஆணையர் சத்தியவதி உள்ளிட்டோர் தலைமையில் கோவில் ஊழியர்கள் விழாவை சீராக நடத்த நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், பேரூர் பகுதி முழுவதும் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவின் தொடர்ச்சியாக வரும் 31ஆம் தேதி இரவு பிரம்மாண்டமான தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவால் பேரூர் பகுதி முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிலவுகிறது.