தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பெய்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் தினந்தோறும் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்கிறது. தொடர்ந்து சில தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


கொட்டிய கனமழை


நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சில பகுதிகளில் இடியுடனும் கனமழை பெய்தது. போத்தனூர், சாய்பாபா காலனி, மசக்காளிபாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், சிவானந்தா காலனி, வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், டிவிஎஸ் நகர், ரயில் நிலையம், வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. இதனிடையே உடையாம்பாளையம் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் பலத்த காற்று வீசியதால், ஒரு வீட்டின் தகரக் கூரை ஒன்று பறந்து மின் கம்பி மீது விழுந்தது. அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மின் கம்பியில் விழுந்திருந்த தகர கூரையை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர் கனமழை காரணமாக சாலைகளின் தண்ணீர் தேங்கியதால் கோவை மாநகரின் முக்கிய சாலைகளான அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கே.ஜி. மருத்துவமனை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.




மலை ரயில் சேவை இரத்து


இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லாறு - ஹில்கிரோவ் இடையேயான ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் மற்றும் பாறைகள் ரயில் பாதையில் சரிந்து விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான நீலகிரி மலை ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.


ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மலை இரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணச்சீட்டு தொகை முழுகையாக திரும்ப வழங்கப்படும் என இரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ம் தேதி மண் சரிவு காரணமாக மலை ரயில் சேவை இரத்து செய்யப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகளுக்கு பிறகு நேற்று மீண்டும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மண் சரிவு காரணமாக நீலகிரி மலை இரயில் இரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.