நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க தலைவர் விஜய் மீது கடும் விமர்சனம் மேற்கொண்டார். “மக்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்கள்” என்று அவர் கூறினார்.
அரசியல் என்பது தன்னலமற்ற சேவையாக இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டதாகவும், இலவசங்களை சாதனைகளாக காட்டி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் சீமான் குற்றம்சாட்டினார். நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு ரூபாய் கூட வாங்காத கட்சி நாம் தமிழர் தான்
“வாக்கிற்கு பணம் வாங்கும் நிலை உருவாகி, மக்கள் பண்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இதை எச்சரித்து வருகிறோம்,” என்றார். மேலும், ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மட்டுமே மக்கள் தேவைகள் பேசப்படுகின்றன என்றும், உண்மையான வளர்ச்சி எங்கே என்ற கேள்வியையும் எழுப்பினார்.
கூட்டணி அரசியலை விமர்சித்த அவர், “தேர்தல் வெற்றிக்காக கட்சிகள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றன. முன்பு எதிர்த்தவர்களுடன் இன்று இணைகின்றன,” எனக் கூறினார். மேலும், தேர்தல் நிதி தொடர்பாக பெரிய கட்சிகள் மீது குற்றச்சாட்டு முன்வைத்து, “ஒரு ரூபாய் கூட வாங்காத கட்சி நாம் தமிழர் தான்” என்றார்.
பதவி ஆசையின்றி தனித்துப் போட்டியிடுகிறோம் என்றும், மக்கள் ஆதரவால் முன்னிலை பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். தி.மு.க ஆட்சியை விமர்சித்த அவர், “நல்லாட்சி இருந்தால் மக்கள் தாமாகவே மீண்டும் தேர்வு செய்வார்கள்” என்றார்.
சாதி, மத, பண அடிப்படையிலான அரசியலை எதிர்த்து, “இவை சமூக சமத்துவத்தையும் மனிதத்தையும் பாதிக்கும்” என வலியுறுத்தினார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மரக்கன்றுகள் நட்டு வருகிறோம் என்றும் கூறினார். பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பாடல் பாடியும் சீமான் வாக்கு சேகரித்தார்.
