Tamil Nadu Public Service Commission நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2A அரசு பணியாளர் தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கின. மாநிலம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தில் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக தேர்வு நடத்தப்பட்டது.
காலை நடைபெற்ற தேர்விற்கு மொத்தம் 332 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 318 பேர் மட்டும் வருகை புரிந்தனர். 14 பேர் தேர்விற்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு 349 தேர்வர்கள் பதிவு செய்திருந்தனர்.
மின்னணு சாதனங்களுக்கு தடை
தேர்வு மையத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு எழுத வந்த அனைவரும் முழுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்மார்ட் வாட்ச், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. தேர்வர்களின் உடமைகள் அனைத்தும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2A தேர்வின் போது சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டதால் தேர்வர்கள் அதிக கவனத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வு சீராக நடைபெற மாவட்ட நிர்வாகமும் தேர்வாணைய அதிகாரிகளும் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எந்தவித குறையும் இல்லாமல் தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
