மலை மாவட்டமாக உள்ள நீலகிரி மாவட்டம் உயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்த பகுதிகளில் பார்த்தீனியம் மற்றும் லேண்டானா போன்ற களைச் செடிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த செடிகள் வளரும் இடங்களில் வேறு எந்த தாவரம், புற்கள் போன்றவை வளர்வதில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அழகுத் தாவரமாக வளர்க்கப்பட்ட லேண்டானா எனப்படும் உன்னிச் செடிகள், நீலகிரி வன கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகள், சாலையோரப் பகுதிகளை அதிகளவு ஆக்கிரமித்துள்ளன. இவற்றால் தாவர உன்னிகளான மான், காட்டெருமை, யானை போன்ற வன உயிர்களுக்கும், வளர்ப்பு கால்நடைகளுக்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வனப்பகுதிக்குள் அதிகரித்து வரும் லேண்டானாவை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




இந்த நிலையில் வனத்துக்கு அச்சுறுத்தலாகவும், எவ்வித பயனும் இல்லாத களை செடியான உண்ணிச்செடிகளை பயனுள்ள வீட்டு உபயோக பொருட்களாக மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் களைச் செடியை அலங்கார பலகை ஓடுகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது கோத்தகிரி கருவி அறக்கட்டளை. இந்த பலகை ஓடுகளை வீடுகளில் அலங்காரத்திற்காக பயன்படுத்த முடியும். இதனால் எந்த பயனும் இல்லாத உண்ணிச்செடிகளை பயனுள்ள அலங்கார பலகை ஓடுகளாக மாற்ற முடியும். அதேசமயம் உண்ணிச்செடிகளின் பரவலை கட்டுப்படுத்த முடியும். மக்களுக்கு தொழில் வாய்ப்பையும், வருமாத்தையும் தரும்.


இதுகுறித்து கருவி அறக்கட்டளை நிறுவனர் ஜான் சிரில் ஹென்றி கூறுகையில், “லாண்டானா கேமரா எனப்படும் உண்ணி செடிகள் இந்தியா முழுவதும் காணப்படும் களைச் செடிகள் ஆகும். லான்டானா காமாரா என்பது அமெரிக்க வெப்பமண்டலத்தை பூர்வீகமாகக் கொண்ட வெர்பெனா குடும்ப தாவரமாகும். இது பல்வேறு வகையான சுற்றுச்சூழல் அமைப்புகளில் வாழக்கூடியது. தற்போது சுமார் 50 நாடுகளுக்கு பரவியுள்ளது. அவ்வாறு பரவிய இடங்களில் இருக்கும் மற்ற தாவரங்களை அழிக்கும் ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளது. இந்த தாவரம் டச்சு ஆய்வாளர்களால் ஐரோப்பாவிற்கு கொண்டு வரப்பட்டு பரவலாக பயிரிடப்பட்ட போது முதலில் அமெரிக்காவிற்கு வெளியே பரவியது. விரைவில் ஆசியாவிலும் பரவியது. மேலும் கோவாவில்  போர்த்துகீசியரால் அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது.




பல்லுயிர் குறைப்புக்கு வழிவகுக்கும் வன விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதன் நச்சுத்தன்மையின் விளைவாக விவசாயப் பகுதிகளை ஆக்கிரமித்தால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். இவற்றைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், விவசாய நிலங்களின் உற்பத்தித்திறனை வெகுவாகக் குறைக்கலாம். பல்வேறு எதிர்மறை தன்மை கொண்ட இந்த தாவரத்தில் இருந்து பலகட்ட முயற்சிகளுக்கு பின், இதனை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த முடியுமா என்ற அடிப்படையில் உட்புற அலங்கார மரப்பலகை ஓடுகளாக மாற்றியிருக்கிறோம். நீலகிரி முழுவதும் பரவியிருக்கும் இந்த களைச் செடியை பலகை ஓடுகளாக மாற்றுவதன் மூலம் இதன் ஆக்கிரமிப்பை கட்டுபடுத்த முடியும். அதேபோல களைச் செடிகளை அலங்கார மரப்பலகை ஓடுகளாக மாற்றுவதன் மூலம் பழங்குடி மற்றும் தொழில் வாய்ப்பும் உருவாக்க முடியும். இந்த பலகை ஓடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பூச்சிகள் அரிக்காது. நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.