கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை நீலகிரி மலை ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் கவர்ந்துள்ள இந்த ரயிலில் பயணிக்க, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி மலை ரயில் 220 சுற்றுலா பயணிகள் உடன் புறப்பட்டு சென்றது. அந்த ரயில் உதகை ரயில் நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெர்ன்ஹில் பகுதியில் மழைறையில் வந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தண்டவாளத்தின் குறுக்கே தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமை வந்தது. இதனைப் பார்த்த மலை ரயில் இன்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதில் மலை ரயில் பெட்டி சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. மேலும் ரயில் வளர்ப்பு எருமை மீது ரயில் மோதி விபத்துள்ளானது. ரயிலின் மீது மோதிய வளர்ப்பு எருமை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.


இந்த விபத்தில் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் மலை ரயிலில் பயணம் செய்த 220 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ரயில்வே துறை உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல் துறையினர் 220 பணிகளையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரயில் பெட்டி தடம் புரண்ட இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளில் ரயில்வே துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உதகையில் மலை ரயில் தடம் புரண்டது உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரிக்கு மலை இரயில் பயணம் செய்வது என்பது, ஒரு உன்னத பயண அனுபவமாக இருந்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது. இந்த நீலகிரி மலை இரயில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை இரயில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுந்து வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயிலில் இருந்து, மலைகள், அடர்ந்த காடுகள், ஆங்காங்கே நீர் வீழ்ச்சிள் இயற்கையின் ஏழில் கொஞ்சும் கண் கொள்ள காட்சிகளை காண முடியும். இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.