கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு ; கைது செய்யப்பட்ட இருவரிடம் என்.ஐ.ஏ. விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இத்ரீஸ் மற்றும் அசாருதீன் ஆகியோரை கோவைக்கு அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர்  மீது நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் தொடர் விசாரணையில், இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 12 வது நபராக முகமது இத்ரீஸ் என்பவரையும், 13வது நபராக அசாருதீன் என்பவரையும் கைது செய்தனர். இது அசாருதீன் கொச்சி சிறையில் வேறு ஒரு வழக்கில் இருப்பதும் சிறையில் இருந்தபடி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருப்பதும் தெரியவந்தது.

Continues below advertisement

இந்நிலையில் இறுதியாக கைது  செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரியில் அனுமதி கேட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இருவரின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பின்னர், கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் சந்தித்த இடங்களிலும் விசாரணை மேற்கொண்டனர். இரு வாகனங்களில் இத்ரீஸ் மற்றும் அசாருதீன் ஆகிய இருவரையும் அழைத்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேசா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள சிறையில் இருந்த அசாரூதின் ஆகியோரை  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்ததால், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola