’இராணுவ தொழில்நுட்ப பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
வாரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 421 ஏக்கர் பரப்பளவில் இராணுவ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட வாரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 421 ஏக்கர் பரப்பளவில் இராணுவ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம், வி.சந்திராபுரம், குளத்துப்பாளையம், புளியமரத்துப்பாளையம் ஆகிய கிராமங்களில் 127 பட்டா நிலங்களை எடுக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதிகளில் தென்னை, வாழை, காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாய நிலங்களை அழித்து தொழிற்பேட்டை அமைத்தால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தொழிற்பேட்டை வெளியேற்றும் கழிவுகளால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாவர்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், வாரப்பட்டி பகுதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்காக தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள விவசாயிகள், பொதுமக்களிடம் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டது. இது பொதுமக்களுக்கான அரசு என முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
அந்த பகுதி மக்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே, நிலங்கள் கையக்கபடுத்தப்படும். குறிப்பாக அரசு நிர்ணயிக்கும் விலையை அவர்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே இடங்கள் கையகப்படுத்தப்படும். அதுவரை எந்த விவசாயியையும், நில உரிமையாளரையும் அரசு கட்டாயப்படுத்தாது. காற்று மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் தொழிற்சாலை வந்துவிடும் என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. அப்பகுதியில் உள்ள நிறுவனங்களின் நிலங்களை மட்டும் அரசு எடுக்கும். விவசாயிகளின் நிலத்தை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தி அரசு எடுக்காது. விவசாயிகள் விருப்பத்தின் பேரில் அவர்கள் ஒப்புக் கொள்ளும் விலை கொடுத்தே அரசு நிலத்தை கையகப்படுத்தும் என்பதை அரசின் சார்பில் உறுதியளிக்கிறோம்.
நீரையோ, காற்றையோ மாசுபடுத்தும் எந்த தொழிற்சாலையும் உறுதியாக வராது. விவசாயிகள் போராட்டக்களத்திற்கு வருவதை தவிர்த்து அரசிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். ஆழியாறு அணையில் இருந்து நீர் எடுத்து செல்லும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அத்திட்டத்தை இரத்து செய்து மாற்று திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தினார். அதைப்போலவே விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். அரசிற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து வழக்கறிஞர் ஈசன் கூறுகையில், “விவசாயிகள் விரும்பும் விலையை அரசு கொடுக்க சட்டத்தில் இடமில்லை. இப்பகுதிக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் தான் வர உள்ளது. இத்தொழிற்சாலைகள் தொடர்பான திட்ட அறிக்கை உள்ளிட்ட 28 வகையான ஆவணங்களை தர வேண்டுமென கேட்டோம். இதுவரை எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. இத்தொழிற்சாலைகளால் அருகில் உள்ள விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இத்தொழிற்சாலைகளை தொழில் வளர்ச்சி தேவையான மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.




















