கோவை கொடிசியா அரங்கில் இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான ரூபே அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி, பெண்களுக்கு ரூபே கார்டுகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, "முதலமைச்சர் முன்னெடுப்பு காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மிகச்சிறப்பாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் துவங்குவதற்கு முன்பு குறைவான பேருக்கு தான் கொடுக்கப்போகிறார்கள் என தவறான தகவல் சொன்னார்கள். ஆனால்  முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. அத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதால், பயனாளிகள் எண்ணிக்கை 1.14 இலட்சமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டம் குடும்பத்தை வளர்ச்சி அடைய செய்ய கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு பெரிய அளவில் வளர்ச்சியை அடையும்.


உரிமை தொகை திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும் என்பதை, இத்திட்டம் நிறுத்தப்படும் என தவறான நோக்கத்தில் சிலர் சொல்வதை நம்பாதீர்கள். சரியாக பணம் செல்கிறதா, ஏதேனும் குறை இருக்கிறதா என ஒழுங்கு செய்யவே ஆய்வு செய்யப்படும். காலை உணவு திட்டம், கட்டணமில்லா பேருந்து பயண திட்டம், அரசுப்பள்ளி பெண் மாணவர்களுக்கான மாதம் உதவித்தொகை ஆகிய திட்டங்கள் பெண்களுக்கான திட்டங்களாக அமைந்துள்ளன. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற கருத்து மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வரும் சொன்னது நியாயமானது, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தடை வரக்கூடாது என்ற முயற்சிக்கு கை கொடுக்கும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.




கோவையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை கணக்கெடுத்து, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாக்கடை, பாதாள சாக்கடையில் கழிவுநீர் மட்டுமே விட வேண்டும். அடைக்கும் அளவிற்கு குப்பைகளை போடக்கூடாது. அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். யாருக்கும் பாதகம் இல்லாமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மது விற்பனையை அதிகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீபாவளியின் போது பிரச்சனை ஏற்படாமல் இருக்க, காவல்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டாஸ்மாக் சார்பாக கடைகளுக்கு பாதுகாப்பான வந்து செல்ல பேரி கார்டர்கள் வைக்கப்படுகிறது. இதில் புதிதாக எதையும் அறிமுகம் செய்து மது குடிப்பதை ஊக்குவிக்கவில்லை. 90 எம்.எல். டெட்ரா பாக்கெட் திட்டங்கள் விரைவாக வரும். அதனை உடனடியாக அமல்படுத்த முடியவில்லை. அதற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. விற்பனையில் உள்ள குறைபாடு காரணமாகவும், பாட்டில்கள் உடைக்கப்படுவதாலும் தான் இந்த புதிய முயற்சியே தவிர மது குடிப்போரை அதிகரிக்க இல்லை. வியாபாரத்தை குறைக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.


தமிழ்நாட்டை குடிகார மாநிலமாகி வருகிறது என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”வீடு வீடாக சென்று நாங்களா குடிக்க சொல்கிறோமா? குடிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முடியாது. டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் கொள்கை உடன்பாடு இல்லை என்றாலும், சில சூழ்நிலைகள் காரணமாக அனுமதிக்க வேண்டியுள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதுக்கடைகள் இல்லையா? மதுக்கடைகளை நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல” எனப் பதிலளித்தார்.