தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கோவையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. முன்னதாக கோவை நேரு விளையாட்டரங்கம் முன்பாக கருணாநிதியின் எட்டடி உயர திருவுருவ சிலையுடன் துவங்கிய பேரணியை தமிழக அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 4000 பேர் பங்கேற்றிருந்தனர். நேரு விளையாட்டரங்கம் முன்பாக துவங்கிய இந்த பேரணி நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக உள்ள அண்ணா சிலை பகுதியில் நிறைவடைந்தது.


அப்போது அண்ணா சிலை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “கட்சியினர் தங்களது உள்ளத்தில் இருக்கும் வேதனையை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டனர். கலைஞர் கருணாநிதி கட்சியினர் மட்டுமல்லாது, பொதுமக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்பது இந்த பேரணி மூலம் வெளிப்பட்டு இருக்கிறது. முதலமைச்சராக இருந்த போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் பல திட்டங்கள் நிறைவேறுவதற்கு முழு முதல் காரணமாக இருந்திருக்கிறார் கலைஞர் என்பதால், தான் மக்கள் அவர் மீது பற்றும் பாசமும் இதுவரை வைத்திருக்கின்றனர்.




முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கலைஞர் நினைத்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். அந்த திட்டங்கள் நிறைவேறுவதற்கு கலைஞர் வழிகாட்டியாக இருந்து வருகிறார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று கூறி இருப்பது கலைஞரின் கொள்கை அனைவரின் மத்தியிலும் சேர வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் அரசின் சார்பில் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையிலேயே இதனை மக்களுக்காக முதலமைச்சர் பயன்படுத்தி இருக்கிறார்” எனக் கூறினார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண