கோவை மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, உணவு பாதுகாப்பு ஆகியவை சார்பில் உலக கைகள் கழுவும் தின விழா, உணவை வீணாக்காமல் பகிர்வோம் மற்றும் உபயோகித்த எண்ணெய் மறு பயன்பாட்டு திட்டங்கள் துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தனியார் கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதையடுத்து கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சிறப்பு பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு பிரிவினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.




பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறியதாவது, ”கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உடல் நலம் தொடர்பான 3 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, ’சற்றே குறைப்போம் திட்டம்’ மூலம் உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணை குறைத்தல் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படுகிறது. ‘உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்’ என்ற திட்டம் மூலம் திருமண விழாக்கள், கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை தன்னார்வலர்கள் மூலம் தேவைப்படுவோருக்கு கொண்டு சேர்க்கிறோம். ‘உபயோகித்த எண்ணை மறுபயன்பாடு’ என்ற திட்டம் மூலம் பெரிய உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைகளை பணம் கொடுத்து வாங்கி அதனை பயோ டீசலாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இந்த மூன்று திட்டங்களிலும் கோவை சிறப்பாக செயல்படுகிறது.


பிரேசில் நாட்டில் ஒரே மாதத்தில் 550 டன் உபயோகப்படுத்தப்பட்ட எண்ணையை மறு சுழற்சி செய்து சாதனை படைத்துள்ளனர். அதனை முறியடிக்க கோவை அதிகாரிகள் இணைந்து முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்துவதில் கோவை தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. 93 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 37 சதவீதத்தினர் 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும்  வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற 5 மெகா தடுப்பூசி முகாம் மூலம் 5.51 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.




கோவை அரசு மருத்துவமனையில் 1.5 கோடி மதிப்பில் சிறப்பு குழந்தைகள் கவனிப்பு மையம் இன்று துவங்கப்பட்டுள்ளது. பிறந்து 28 நாட்களுக்குள்ளாக வெவ்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் இங்கு பராமரிக்கப்படுவார்கள். கோவையில் கொரோனா குறைந்தாலும் பரிசோதனை செய்வதை குறைக்கவில்லை. கோவையில் தனியார் பங்களிப்பு நிதி மூலம் 7 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.


2 வயது முதல் 18 வயசுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழ்நாடு பணிகளை தொடங்கி விடுவோம். அம்மா கிளினிக் ஒரு குறுகிய காலத் திட்டம். அந்த திட்டம் முடிவடைந்து விட்டது. அம்மா கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு பெற முதலமைச்சர் முயன்று வருகிறார்” என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்காரா, அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.