ரோஜ்கர் மேளா என்ற மத்திய அரசுத் துறைகளில் தேர்வாகியுள்ள நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் 46 இடங்களில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள் இந்திய அஞ்சல் துறை இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை, இந்திய வருவாய்த்துறை, உயர்கல்வித் துறை, இந்திய பாதுகாப்பு துறை, இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், ”10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி கொடுப்பேன் என்று பிரதமர் சொல்லி இருந்த நிலையில், 8 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களை சார்ந்தவர்கள் பல்வேறு துறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் மக்களுக்கு சேவை, திட்டங்களுக்கு அரசுதான் முன் எடுப்பாக இருக்க வேண்டும். அதனை பிரதமர் மோடி செய்து உள்ளார்” எனத் தெரிவித்தார்.




பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகன், ”பிரதமரின் ரோஜ்கர் மேளா அரசு வேலை என்பது ஒருவருக்கு கனவு. இது அரசு துறையில் வேலை வழங்குகிறது. 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேர் அரசு வேலை தருவதாக பிரதமர் கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. எட்டாவது ரோஜ்கர் மேளாவில் 8 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கியுள்ளது. பா.ஜ.க தலைமையில் இருக்கும் இடங்களில் வேலை வாய்ப்பு வழங்கபட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கப்பட்டு 3 லட்சம் கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. அது போல் வந்தே பாரத் ரயில் சேவை, சந்திராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்கள் நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பொருட்களும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்.


2047-ம் ஆண்டு பாரத தேசம் பெருமளவில் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும். புதிய இந்தியாவை கட்டமைப்பில் இளைஞர்கள் பங்கு முக்கியமானது. 2014 க்கு முன்னால் 500 ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தான் இருந்தது. தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் ஸ்டார்ட்-அப் கம்பெனிகள் உள்ளது. அதில் 30 வயது கீழ் உள்ள இளைஞர்கள் சி.இ.ஓ.வாக உள்ளனர். புதிய பாரத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தமிழக மீனவர்கள் படகுகள் பிடிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம். 2014-க்கு முன்பு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு கொல்லப்படவில்லை. மீனவர்களுக்காக புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாகியுள்ளார். பி.எம்.எஸ் திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு 17,000 கோடிக்கு தொடர்பு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு, “இது அரசு நிகழ்ச்சி. அரசு திட்டங்கள் சார்ந்த கேள்விகளை மட்டும் கேளுங்கள்” எனப் பதிலளிக்க மறுத்து விட்டார்.