துப்பாக்கி, லத்தியுடன் சுற்றி வரும் ஏராளமான போலீஸ்களை பார்த்து பழக்கப்பட்டிருப்போம். ஆனால் இந்த போலீஸ் சற்று வித்தியாசமானவர். கேமராவுடன் சுற்றி வருபவர். குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர். அவர் தான், சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரன்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். ராக்கி மகேஷ் என்ற புனை பெயரில் நில் கவனி செல், இது தகுமா?, இப்படிக்கு போலீஸ், அவர் வருவாரா, வீட்ல இருங்க விலகி இருங்க உள்ளிட்ட 12 குறும்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். சாலை விபத்துகளை குறைத்தல், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தல், குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கொரோனா விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு இக்குறும்படங்களை எடுத்துள்ளார்.
குறும்படங்களுக்கு கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி வரும் மகேஷ்வரன், இப்படங்களை எடுக்க தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகிறார். மேலும் தனது நண்பர்கள் உதவியுடன் கேமரா, எடிட்டிங் பணிகளை படங்களுக்கு செய்து திரையிட்டு வருகிறார். மகேஸ்வரனின் ’இது தகுமா?’ என்ற குறும்படம் ’கியாகி ஷகி ஹே’ என்ற பெயரில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். குறும்படங்கள் மட்டுமின்றி, இளைஞரான இருந்த காலத்தில் இருந்து எழுதிய ஏராளமான சிறுகதைகளை ‘புகுந்த வீட்டை புரிந்து கொள் மருமகளே’ என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் கூறுகையில், “கல்லூரியில் படிக்கும் போதே சிறுகதை, நாடகம் எழுதுவேன். அந்த ஆர்வம் காவல் துறையில் சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது. அதன் காரணமாக காவல் பணி முடித்த பின்னர் மற்ற நேரங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வருகிறேன். குறும்படங்கள் மூலம் மக்களுக்கு எளிதாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். கடந்த 2004 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் லஞ்சம் வாங்காமல் நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டுமென கூறி எனது சிறுகதையை வாழ்த்தினார். அது எனக்கு பெரும் ஊக்கம் அளித்தது.
சாலை விபத்துகளுக்கு காரணமான குடிபோதையில் வாகனம் ஒட்டுதல், தலைக்கவசம் அணியாதது, அதீத வேகத்தில் வாகனம் ஒட்டுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களை எடுத்து திரையிட்டேன். அதேபோல கொரோனா தொற்று மற்றும் குற்றச் செயல்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களையும் எடுத்துள்ளேன். உயரதிகாரிகள் அளித்த ஊக்கத்தின் காரணமாக தொடர்ந்து குறும்படங்களை இயக்கி வருகிறேன். குறும்படங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த கட்டமாக குற்றச் சம்பவங்களை பிண்ணனியாக கொண்ட குறும்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.