குனியமுத்தூர்,சுகுணாபுரம்,கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்றுவயதுடைய ஆண் சிறுத்தை கடந்த திங்கட்கிழமை சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பாழடைந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஐந்து காமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.



கூண்டு வைத்து 5 நாட்களாக வனத்துறையினர் காத்திருந்த போதிலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. கோவை வனத்துறையினரும் சிறுத்தை தானாகக் கூண்டில் வந்து சிக்கும் வரை பொறுமை காத்திருந்தனர். சிறுத்தை மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வராமல் இருந்து வந்தது. 5 நாட்களாக உணவு, தண்ணீர் போன்றவை இல்லாமல் இருந்த சிறுத்தை, உணவுக்காக குடோனில் இருந்து வெளியேற முயன்றது. 6வது நாளான நேற்று குடோன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டு பகுதிக்குச் சிறுத்தை வந்தது. சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் சிறுத்தை முழுமையாகக் கூண்டிற்குள் வந்தவுடன் கதவை மூட தயாராக இருந்தனர். சிறுத்தை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வந்த நிலையில், வன ஊழியர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு கூண்டின் கதவை அடைத்ததால் சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து உடனடியாக அங்கு வந்த கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் வனத்துறை ஊழியர்களைப் பாராட்டினார்.






மேலும் சிறுத்தை கூண்டில் சிக்கியது அந்த பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்தது. இந்த சிறுத்தை பிடிக்கும் பணியில் 50கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிப்பட்ட சிறுத்தை உணவு அருந்தாததால், சோர்வுடன் இருக்கின்றது. ஆனால் ஆரோக்கியமாக இருந்தது. அதற்கு வனத்துறையினர் உணவுகள் வழங்கிய பிறகு ஆனைமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனத்தில் சிறுத்தை விடப்பட்டது. கோவை குனியமுத்தூர், சுகுணாபுரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை, ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. அந்த வீடியோவை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஐஏஎஸ் சுப்ரதா சாஹு ட்விட்டரில் வெளியிட்டார். பொதுவாக ஊருக்குள் வரும் வனவிலங்குகள் மயக்க ஊசி செலுத்தியே பிடிக்கப்படும். ஆனால், அவ்வாறு செலுத்தப்படும் மயக்க ஊசியின் அளவு அதிகரித்தால் விலங்குகளின் உயிருக்கே அது ஆபத்தாகிவிட வாய்ப்புள்ளது. எனவே, மயக்க ஊசி செலுத்தாமல் 5 நாட்களாகப் பொறுமையுடன் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதை உயிருடன் பிடித்த வனத்துறையினரைப் பொதுமக்கள் மட்டுமின்றி விலங்கு நல ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.