மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி ( 40). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். கோவையில் செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக இருந்த போது அவருக்கு பல பேரிடம் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. இதனால் சுஜித் மைட்டியிடம் பலர் தங்க கட்டிகளை கொடுத்து ஆபரணங்களாக மாற்றி வாங்கி வந்தனர். கிலோ கணக்கான தங்க கட்டிகளை அவர் பெற்று ஆபரணங்களாக மாற்றி கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல் கிரிக்கெட் நடந்த போது சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் அவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் பலரிடம் வாங்கிய நகைகளை விற்று செலவு செய்ய தொடங்கினார். ஐ.பி.எல் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதிலும் பணத்தை இழந்துள்ளார். நாளடைவில் அவரிடம் நகையை கொடுத்தவர்கள் திருப்பி கேட்க தொடங்கினர். இதனால் அவர் ஒருவரிடம் வாங்கிய நகையை மற்றவரிடம் கொடுத்து சில நாட்கள் சமாளித்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல நகை கொடுத்தவர்கள் அவரிடம் திருப்பி கேட்க தொடங்கினர்.
அப்போது அவர் தன்னிடம் உள்ள 2 கிலோ தங்கத்தை எடுத்துக் கொண்டு தான் இழந்த பணத்திற்கு அதை வைத்து கொள்ள முடிவு செய்து, நகையுடன் தலைமறைவானார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொல்கத்தாவிற்கு அனுப்பி வைத்தார். தங்க கட்டிகளை கொடுத்தவர்கள் அவர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகையை கொடுத்த வடவள்ளியை சேர்ந்த கனகராஜ், செட்டி வீதியை சேர்ந்த குருசாமி, டவுன்ஹால் பகுதியை பிரகாஷ், ஜனா ஆகியோர் வெரைட்டி ஹால் காவல் நிலையம் மற்றும் பெரியகடை வீதி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் சுஜித் மைட்டியை தேடி வந்தனர். அப்போது அவரது செல்போன் எண்ணை டவரை ஆய்வு செய்தனர். அதில் அவரது செல்போன் எண் காசி, வாரணாசி, நேபாளம் என சுற்றி வந்தது. பின்னர் அவரது எண்ணை பின் தொடர முடியவில்லை. அவரை கண்டு பிடிக்க கோவையில் இருந்த அவரது உறவினரின் செல்போன் எண்ணை பின் தொடர போலீசார் முடிவு செய்தனர். உறவினரின் செல்போனை பின் தொடரந்த போது அவருக்கு சுஜித் மைட்டி புதிய செல்போன் எண்ணில் டெல்லியில் இருந்து பேசியது தெரியவந்தது. உடனே காவல் துறையினர் அந்த எண்ணை வைத்து அவரை பிடிக்க முடிவு செய்தனர்.
பின்னர் சுஜித் மைட்டி டெல்லியில் இருந்து கோவை வருவது தெரியவந்தது. ரெயில் மூலம் சுஜித் மைட்டி கோவை வருவதை உறுதி செய்த காவல் துறையினர் ரெயில் நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் 2 கிலோ தங்கத்தில் அரை கிலோ தங்கத்தை அவர், ஆடம்பரமாக செலவு செய்தது தெரிவந்தது. அந்த பணத்தில் அவர் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி ஊரை சுற்றி வந்துள்ளார். பெண்களிடமும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த 1½ கிலோ தங்கம் மற்றும் 1500 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் சுஜித் மைட்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்