ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்திய நாடு விடுதலை பெற்று, 75 வது ஆண்டுகளாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்திற்காக நாடே போராடிய போது, சுதந்திரப் போராட்டத்தில் கோவை மாவட்டம் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கிறது. போராட்டங்கள், இரயில் கவிழ்ப்பு, விமான படைத்தள எரிப்பு, சிறைவாசம் என கோவை மக்கள் போராடி, பல தியாகங்களை செய்துள்ளனர். அதிலும் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதற்காக சூலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் திமிர் வரி செலுத்தியுள்ளனர். இன்றைய தலைமுறையினர் அறியாத கோவையில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இதோ...
கோவைக் கோட்டை போர்
ஆங்கிலேயர்கள் வருகை காலத்தில் மைசூர் அரசர்களாக இருந்த ஹைதர் அலி, திப்பு சுல்தானின் ஆளுகையின் கீழ் கோவை மாவட்டம் இருந்து வந்தது. தற்போது கோட்டைமேடு என அழைக்கப்படும் பகுதியில், ஒரு கோட்டை இருந்தது. ஹைதர் அலி காலத்தில் கோவைக் கோட்டை நன்கு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது அக்கோட்டைச் சிறைக்குள் பல முக்கியமான எதிரித் தலைவர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். இந்தக் கோட்டைக்காக ஆங்கிலேயர்களுடன் மூன்று முறை போர் நடைபெற்றுள்ளது.
1768 ம் ஆண்டில் மைசூர் போர் நடந்து கொண்டிருந்த போது, கர்னல் உட் என்ற ஆங்கிலேய அதிகாரி கோவைக் கோட்டையை எளிதாக கைப்பற்றிக் கொண்டார். சிறிது காலத்தில் ஹைதரின் படைத் தலைவர்களில் ஒருவரான பாஸில் உல்லாக்கான் படைகளைத் திரட்டி வந்து, ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தி கோட்டையை கைப்பற்றினார்.
1782 ம் ஆண்டில் கர்னல் புல்லர்டன் என்பவர் கோவைக் கோட்டையை பிடித்த தகவல் அறிந்த திப்பு சுல்தான், நேரடியாக கோட்டையை முற்றுகையிட்டு வென்றார். பின்னர் 1790 ம் ஆண்டில் மீண்டும் ஆங்கிலேயர்கள் கோட்டையை பிடிக்க, மைசூர் படைகளால் நடத்திய போரில் ஆங்கிலேயர்கள் சரணடைந்தனர். கோவைக் கோட்டை தொடர்ந்து பிரச்சனைக்கு உரியதாக இருந்து வந்ததால், அக்கோட்டை அழிக்கப்பட்டது. 1799ம் ஆண்டில் திப்பு சுல்தான் போரில் கொல்லப்பட்ட பின்னர், கோயம்புத்தூர் முழுமையாக ஆங்கிலேயர்கள் வசம் சென்றது.
கோவையில் காந்தியடிகள்
விடுதலை போராட்டக் காலத்தில் 1921, 1927, 1934 ம் ஆண்டுகளில் காந்தியடிகள் கோவைக்கு வருகை தந்துள்ளார். தற்போது வ.உ.சி. மைதானம் என அழைக்கப்படும் காரனேஷன் பூங்கா திடலில் நடந்த பொதுக்கூட்டங்களில் காந்தியடிகள் உரையாற்றியுள்ளார். 1934ம் ஆண்டில் அரிஜன நலநிதி திரட்ட கோவை வந்த காந்தியடிகள், ஒய்.எம்.சி.ஏ. கிராம புனருத்தாரண நிலையத்தை பார்வையிட்டார். அங்கு காந்தியடிகள் ஒரு நாவல் மரக்கன்றை நட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை கோவை சிறையில் சிறைவாசம் அனுபவித்தார். அவர் இழுத்த செக்கு இன்றும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் சில காலம் கோவையில் ஒரு நியாய விலைக்கடையை நடத்தியுள்ளார்.
சிங்காநல்லூர் இரயில் கவிழ்ப்பு
’செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ம் ஆண்டில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ’வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதையொட்டி கோவை ஒண்டிபுதூர் பகுதியில் சொக்கங்காளி தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் இரயில்களை கவிழ்ப்பது, சூலூர் விமான தளத்தை கொளுத்துவது, சிறைகளை உடைத்து கைதிகளை விடுதலை செய்தல், அரசு அலுவலகங்களை கைப்பற்றி போட்டி அரசு நடத்துதல் ஆகிய திட்டங்கள் தீட்டப்பட்டன. இத்திட்டங்களை செயல்படுத்த தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன.
உதகை அரவங்காட்டில் இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருந்து வெடி மருந்து, போர்க் கருவிகளோடு சரக்கு இரயில் போத்தனூர் வழியாக ஈரோடு செல்வது போராட்டக்காரர்களுக்கு தகவல் கிடைத்தது. சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் ஆகஸ்ட் 13ம் தேதியன்று நள்ளிரவில் இரயில் தண்டவாளங்களை தகர்த்ததால், சரக்கு இரயில் தடம் புரண்டது. பெட்டிகள் குளத்தில் கவிழ்ந்தன. உயிர்சேதம் எதுவும் இல்லை.
சூலூர் விமான தளம் எரிப்பு
சூலூர் விமான தளம் போராட்டக்காரர்களின் அடுத்த இலக்காக இருந்தது. ஆகஸ்ட் 26 ம் தேதியன்று அத்தளத்தில் இருந்த கொட்டகைகளும், லாரிகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஆனால் எதிர்பாராத விதமான இரண்டு பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து தப்பிச் சென்ற ஒருவன், சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தான். இதையடுத்து போராட்டக்காரர்கள் ஒவ்வொருவராக பிடித்து சித்ரவதை செய்யப்பட்டனர். பலர் சிறைவாசம் அனுபவித்தனர்.
ஒரு குழு சிங்காநல்லூர், பள்ளபாளையம் பகுதியில் இருந்த கள்ளுக்கடைகளுக்கு தீ வைத்தது. பல குழப்பங்களால் போராட்டக்காரர்கள் திட்டமிட்டபடி திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போனது. இப்போராட்டங்களில் பங்கேற்ற பஞ்சாலைத் தொழிலாளர்களை பிடிக்க, பஞ்சாலைகளுக்குள் காவல் துறை புகுந்தது. பஞ்கஜா மில்லுக்குள் காவல் துறையினர் சென்ற போது, தொழிலாளர்களுடன் மோதல் ஏற்பட காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
திமிர் வரி
ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்ற நூற்றுக்கானோர் மீது வழக்குகள் பாய்ந்தன. கொடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டன. கடுங்காவல் தண்டனைகள் வழங்கப்பட்டன. இராணுவ விமான தளம் நாசமாக்கப்பட்டதற்கான இழப்புத் தொகையை, அதற்குக் காரணமான பொதுமக்களே ஏற்க வேண்டுமென ஆங்கிலேய அரசு அறிவித்தது. வழக்கமாகச் செலுத்தும் வரிகளோடு திமிர் வரியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என சூலூர் சுற்று வட்டார ஊர் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இத்தகைய போராட்டங்களாலும், தியாகங்களாலும் கோவை சுதந்திரப் போராட்டத்தில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளது. இன்று சுதந்திரம் அனுபவிக்கும் ஒவ்வொருவரும் இத்தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்