ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை பொள்ளாச்சியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும் போது, ”பிரதமர் மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியும் தமிழக மக்களை மயக்கி அவர்களிடம் வாக்குகளைப் பெற்று எப்படியாவது பாஜகவுக்கு தமிழகத்தில் டெபாசிட் ஆவது வாங்க வேண்டும் என்று நினைத்து  அடிக்கடி தமிழகம் வந்து சென்று கொண்டிருக்கிறார்.


நாட்டு மக்களை தங்கள் குடும்பம் எனச் சொல்லும்  மோடிக்கு சவால் விடுகிறேன். தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கினால் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன். சிஏஏ  சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தூக்கி எறியப்படும். காங்கிரஸ் கட்சி இரண்டு வேட்பாளர் பட்டியல்களை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மூன்று அல்லது நான்கு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நடிகை குஷ்புக்கு பிச்சை எடுப்பதில் ஆர்வம் உள்ளார். அவருக்கு விரைவில் பிச்சை எடுக்கும் நிலைமை வரும். மோடி சொல்வதும் அர்த்தம் கிடையாது. மோடி பற்றி மற்றவர்கள் சொல்வதிலும் அர்த்தம் கிடையாது. மோடியின் மொத்த உருவமே பொய், புளுகு, பித்தலாட்டம் மட்டும் தான்.


ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்தை செய்தவர் ஜெயலலிதா தான். தமிழகத் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின் தொடர்வது  ஸ்டாலினின் 3 ஆண்டுகால சாதனை. போதைக்கு எதிராக தற்போது  நடவடிக்கை எடுப்பதால் தான் அனைவரும் பிடிபடுகின்றனர். தமிழகத்தில் திமுக வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவினர் டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்” எனத் தெரிவித்தார். மகளிர் உரிமைத் திட்டத்தை நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு விமர்சித்ததை கண்டித்து, திமுகவினர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.