ஈரோடு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்ததாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி உறவினரிடம் பலமுறை தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளார். அது குறித்து விசாரித்தபோது சிறுமியுடன் வளர்ப்புத் தந்தை பாலியல் உறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, இடைத்தரகர் மாலதி ஆகியோர் கைது செய்தனர். காவல் துறையினர் விசாரணையில் கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து வளர்ப்பு தந்தையான சையத் அலி என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதன் மூலம் வரும் கருமுட்டைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. சிறுமியின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி ஆதார் அட்டை தயாரித்த ஜோசப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் வளர்ப்புத் தந்தை சிறுமியின் 12 வயதில் இருந்து அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதில் 5,000 ரூபாய் இடைத்தரகராக செயல்பட்ட மாலதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட சுகாதாரத்துறையினர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கருமுட்டை விவகாரத்தில் சுதா மருத்துவமனை சேலம் மற்றும் ஈரோடு கிளை, பெருந்துறையில் உள்ள ராம் பிரசாத் மருத்துவமனை, விஜய் மருத்துவமனை ஓசூர் உட்பட 4 தனியார் மருத்துவமனைகள் சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும், வணிக ரீதியாக செயல்பட்டதோடு முறைகேடாக கருமுட்டை சிகிச்சை செய்த நான்கு மருத்துவமனைகளும் 15 நாட்களுக்குள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையின் ஸ்கேன் செண்டருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் உள்ளவர்களை 15 நாட்களுக்குள் வெளியேற்றி நிரந்தரமாக மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்