முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோர்  கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், கூடுதல் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் கூடுதல் விசாரணை செய்தனர்.


இந்நிலையில் கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு 4 வார கால அவகாசம் அளித்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதையடுத்து கோடநாடு வழக்கு விசாரணையை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் அவரது உறவினர் தினேஷ் ஆகியோரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோடநாடு எஸ்டேட்டிலும் தனிப்படை காவல் துறையினர் ஆய்வு நடத்தினர்.


இதை தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக கூடலூர் பகுதியை சார்ந்த அனீஸ் மற்றும் சாஜியிடம்  உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடநாடு தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணமூர்த்தி , கோத்தகிரி ஆய்வாளர் வேல் முருகன் ஆகியோர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.


இதனிடையே கோடநாடு எஸ்டேட் மீது ட்ரோன் பறந்ததாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் எஸ்டேட் மீது ட்ரோன் பறந்ததாக எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ட்ரோன் பறக்க விட்டது யார்?, என்ன நோக்கத்திற்காக ட்ரோன் பறக்க விடப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.