நகரத்தின் தொடர்பு எல்லைக்கு அப்பால் மலைத் தொடர்களிலும், அடர் வனங்களில் வாழும் பழங்குடியின குழந்தைகள் கல்வி பயில்வதே சாவாலானது. அச்சாவல்களை தாண்டி படிக்கும் மாணவர்களின் கல்வியை, கொரோனா தொற்று பரவல் முடக்கிப் போட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. செல்போன் இல்லை, சிக்னல் இல்லை, தொலைக்காட்சி இல்லை, கேபிள் இல்லை, கல்வித் தொலைக்காட்சி இல்லை, மின்சாரம் இல்லை என மலைத்தொடர்களைப் போல தடைகள் நீள்கின்றன. பழங்குடியின மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ள சூழலில், மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறி வருவதும் நடந்து வருகிறது. இத்தகைய சூழலை மாற்றி பழங்குடி மாணவர்கள் கல்வி பயில தன்னார்வர்கள் ஆங்காங்கே வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் காளி திம்பம் என்ற பழங்குடி கிராமம் உள்ளது. திம்பம் மலை உச்சியில் அடர் வனத்திற்குள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள பகுதி. செல்போன் சிக்னல் இல்லாத கிராமம். சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத இக்கிராமத்திற்கு வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த கரடு முரடான மண் பாதையில் தான் பயணிக்க வேண்டும். இக்கிராம மக்களுக்கு வனப்பொருட்கள் சேகரிப்பும், விவசாயமும் வாழ்வாதாரம். அண்மைக் காலமாக தான் கல்வி வாசம் இக்கிராமத்திற்கு எட்டத் துவங்கியுள்ளது. இருப்பினும் பள்ளி இல்லாததால் குழந்தைகள் கல்வி பயில 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலமலை உண்டு உறைவிட பள்ளி அல்லது 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆசனூர் பள்ளிக்கு செல்ல வேண்டும். இக்கிராமத்தில் பல்வேறு தடைகளை தாண்டி முதல் பட்டதாரியாக சத்தியமூர்த்தி உருவெடுத்துள்ளார். அதிலும் சத்தியமங்கலம் மலைப்பகுதி பழங்குடிகளில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே நபர் சத்தியமூர்த்தி தான். புதுச்சேரி பலகலைகழகத்தில் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், வேலைக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார். இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் கல்வி பயில முடியாத மாணவர்களுக்கு ஆசிரியராக உருவெடுத்துள்ளார், சத்தியமூர்த்தி. தனது மனைவி செளமியா உடன் இணைந்து சுமார் 30 மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார்.




இதுகுறித்து சத்தியமூர்த்தி கூறுகையில், “வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சத்தியமங்கலம் காடுகளில் உள்ள பழங்குடியின கிராமங்கள் பாதிக்கப்பட்டது. அதிரடி படையினரால் பாதிக்கப்பட்டவர்களில் எனது அப்பாவும் ஒருவர். மக்கள் கண்காணிப்பகத்தின் உதவியுடன்  பள்ளிக் கல்வியை முடித்தேன். புதுச்சேரி பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.


சமவெளி மாணவர்கள் போல பழங்குடியின மாணவர்கள் இல்லை. மாணவர்கள் படிக்க வருவதே சாவலானது. கிராமத்தில் உள்ள பெற்றோர்களிடம் ல்வி குறித்து போதிய விழிப்புணர்வு கிடையாது. பள்ளி இடைநிற்றல்கள் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. நன்றாக படித்து வந்த எனது மாமா பையன் ஊரடங்கினால் படிக்க முடியவில்லை. இதனால் அவனுக்கு பாடங்கள் மறந்து போயின. இதே நிலையில் தான் மற்ற மாணவர்களும் இருந்தனர். இந்நிலை நீடித்தால் கல்வி பயில மானவர்கள் மீண்டும் செல்லமாட்டார்கள். எனவே ணவர்களுக்கு படிப்பின் மீது தொடர்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தி படிக்க செய்ய வகுப்புகள் நடத்தி வருகிறோம். கடந்த வருடம் 5 மாணவர்களுடன் துவங்கிய வகுப்புகள், தற்போது 30 மாணவர்களுடன் நடந்து வருகிறது.




எனது மனைவி செளமியா   5 ம்  வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நானும் பிரித்து வகுப்புகளை எடுத்து வருகிறோம். ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நண்பர்கள் உதவியுடன் பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வாசிப்புத் திறனை மேம்படுத்த கதைப்புத்தகங்கள் வழங்கி கதை சொல்லி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒரு ஆசிரியரைக் கொண்டு வாரத்திற்கு இரண்டு ஓவிய வகுப்புகளை எடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.


கல்வி மட்டுமே மாணவர்களை மேலே உயர்த்தும் என்பதை உணர்ந்து தான் படித்தது மட்டுமின்றி மற்றவர்களும் கல்வி பயில உதவிகளை செய்து வரும் சத்தியமூர்த்திக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.