கோவை விமான நிலையத்தில் மதம் மற்றும் ஆடை அடிப்படையில் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுவதாக கூறிய நடிகை சனம் ஷெட்டியின் புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் தெரிவித்துள்ளார்.


கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை சனம் ஷெட்டி சென்றுள்ளார். அப்போது அவரது மற்றும் சில பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ”சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றேன். அப்போது விமானத்தில் ஏறும் முன் அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் எனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 2 பேரின் பைகளை சோதனை செய்தார். இது குறித்து கேட்ட போது, அந்த அதிகாரி குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பிற்காக சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். 



சோதனை செய்த இடத்தில் எந்த ஸ்கேனர் கருவியும் இல்லை. வெறும் கண்களால் ஒரு நபரை பார்த்து சந்தேகத்தின் பேரில், சோதனை நடத்துவது மன வேதனை தருகிறது. இந்த விமானத்தில் 190 பேர் பயணம் செய்தனர். மற்றவர்கள் பைகளை ஏன் சோதனை செய்யவில்லை. அவர்கள் எதுவும் கொண்டு செல்ல மாட்டார்களா? குறிப்பிட்ட சிலரை மட்டும் சோதனை செய்வது கஷ்டமாக உள்ளது. சோதனை செய்தால் அனைவரின் உடைமைகளையும் சோதனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். பிரபல நடிகை கூறிய கருத்தானது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


இது குறித்து கோவ்வை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், ”வருகிற 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி கோவை விமான நிலையத்தில் பயணிகள் 2 கட்டமாக சோதனை செய்யப்படுகின்றனர். விமான நிலையத்தின் உள்ளே செல்லும் போது ஒரு முறையும், விமானத்தில் ஏறும் முன் ஒரு முறையும் சோதனை செய்யப்படுகிறது.
நடிகை சனம் ஷெட்டி கூறுவது போல குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து சோதனை செய்யப்படவில்லை. இருப்பினும் அவரது புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பயணிகளை இன்முகத்துடன் வரவேற்று சோதனை செய்ய அறுவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண