கோவையில் பதற்றமான சூழலில் பாஜகவின் பந்த் அறிவிப்பு அவசியமற்றது எனவும், பாஜக அறிவித்துள்ள பந்த் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது எனவும் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியிம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையம் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை என பரிந்துரை செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வேண்டும். இந்த சம்பவத்தை அதிகாரிகளின் அலட்சியமாக மட்டுமே பார்க்க கூடாது. இது பன்னாட்டு நிறுவனத்திற்கு கைபாவையாக செயல்பட்ட அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். 




கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்தில், விபத்தாக நடக்கவில்லை என்றால் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும். சம்பவம் நடந்தவுடன் காவல் துறை டிஜிபி நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்துள்ளார். மேலும் விரைவில் கைது நடவடிக்கை, அவர்களது பின்னனியை கண்டுபிடித்தது பாராட்டத்தக்கது. பன்னாட்டு விசாரணை இருப்பதால் தமிழக முதல்வர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது வரவேற்கத்தக்கது. பதற்றமான சூழலில் பாஜகவின் பந்த் அறிவிப்பு அவசியமற்றது. இது குறித்து அனைத்து கட்சியினரை அழைத்து பேச ஆட்சியரிடம் கூற உள்ளோம். இம்மாதிரியான சூழலில் அரசியல் கட்சியினர் தீயணைப்பு நிலையங்கள் போல செயல்பட வேண்டும். பதற்றமான சூழலில் பாஜக அறிவித்துள்ள பந்த் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது. மத்திய, மாநில உளவுத் துறையின் தோல்வி உள்ளதை அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக என்ஐஏ விசாரணை வளையத்தில் இருந்த நபர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதால், என்ஐஏவின் குறைபாடும் இதில் உள்ளது. இந்த அமைப்புகளை பலப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.


கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து வருகின்ற 31ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண