கோவையில் அதிவேகமாக வந்த கார் மோதி பைக் தூக்கி வீசப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின், பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


மகனை அழைத்துச் சென்ற தந்தை:


கோவை பொள்ளாச்சி அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவர் தனது 10 ஆம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மலை (15) திருச்சியில் நடைபெறும் கபடி போட்டிக்கு அனுப்பி வைப்பதற்காக கோவை நவக்கரை பகுதியில் இருந்த பயிற்சியாளரிடம் விட தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார்.


கோர விபத்து:


பொள்ளாச்சியில் இருந்து வேலந்தாவளம் வழியாக வந்த ஜாகிர் உசேன், கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஜாகிர் உசேன் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட, சாலையில் விழுந்து படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் அஜ்மல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தானது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் காட்சியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


விபத்து நிகழ்ந்தது எப்படி?


அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் படி, குறுகலான சாலையில் கறுப்பு நிற காருக்கு பின்பு அதிவேகமாக வந்த ஒரு சில்வர் நிற கார், திடீரென வலது பக்கமாக ஏறியுள்ளது. அப்போது எதிர்புறமாக வந்த பைக்கின் மீது மோதியதில், அந்த வாகனம் சுக்குநூறாக உடைந்து காற்றில் பறந்து பின்புறமாக வந்த மற்றொரு வாகனத்தின் முன்பக்கத்தில் சொருகியுள்ளது. இதில், பல அடி தூரம் சென்று விழுந்த ஜாகிர் உசேன் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதோடு, தூக்கி வீசப்பட்ட பைக் சென்று சொருகியதால் எதிரே வந்த டிராவல்ஸ் வாகனத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.


போலீசார் விசாரணை:


விபத்தை கண்ட அருகே இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து உயிருக்கு போராடிய சிறுவன் அஜ்மலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிந்த ஜாகிர் உசேன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.