கோவை காங்கிரஸில் வெடித்த உட்கட்சி மோதல்!! காயத்ரிக்கு ஸ்ரீநிதி கடும் பதிலடி...
காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வரும் உட்கட்சி மோதல் கோவையில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. தன் மீது அவதூறு பரப்புவோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக சிங்காநல்லூர் முன்னாள் வேட்பாளர் ஸ்ரீநிதி எச்சரிக்கை.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தைத் தொடர்ந்து, கோவை காங்கிரஸ் வட்டாரத்தில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஜோதிமணியின் கருத்துக்கு சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் வேட்பாளரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளருமான ஸ்ரீநிதி எதிர்வினையாற்றிய நிலையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீநிதி, தன் மீது சமூக வலைதளங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.
தான் பணம் கொடுத்து தேர்தல் சீட் பெற்றதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என்றும், காங்கிரஸ் தலைமை தனது திறமையையும் அரசியல் செயல்பாடுகளையும் மதித்து வாய்ப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் பல்வேறு ஆலோசனைக் குழுக்களின் பரிசீலனைக்குப் பிறகே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் கூறினார்.
மேலும், பணம் கொடுத்து சீட் பெற்றதாக கூறுவது தனக்கு எதிரான குற்றச்சாட்டு மட்டுமல்ல; காங்கிரஸ் தலைமை மற்றும் கட்சியின் தேர்வு நடைமுறைகளையே கேள்விக்குள்ளாக்கும் செயலாகும் என்றும் ஸ்ரீநிதி விமர்சித்தார்.
தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகவில்லை என்றும், தொடர்ந்து கட்சியிலேயே செயல்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். சில நிர்வாகிகள் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பொறாமை காரணமாகவும் வதந்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.
தனது குடும்பம் மற்றும் தனிப்பட்ட கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் ஸ்ரீநிதி எச்சரித்தார். இந்த விவகாரம் கோவை மாவட்ட காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
ட்ரெண்டிங் செய்திகள்






















