வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய கையிருப்பு இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேசிய தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வணிக சிலிண்டர் விநியோகம் தடை
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக சிக்கல்கள் காரணமாக, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு சராசரியாக 750 டன் எரிவாயு தேவைப்படுகின்ற நிலையில், தற்போதைய தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். மாதத்திற்கு சுமார் 22,000 டன் அளவிற்கு எரிவாயு தேவை இருப்பதாகவும், இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு பயன்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வணிக LPG தட்டுப்பாடு தீவிரம்
மேலும், தற்போதைய கையிருப்பு நிலவரப்படி இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே விநியோகத்தை சமாளிக்க முடியும். அதன் பின்னர் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளது என்றார்.
மத்திய அரசு வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட பல துறைகள் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை நம்பியே செயல்பட்டு வருகின்றன என்பதால், குறைந்தபட்ச விநியோகம் தொடர்ந்து கிடைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
