கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் பாரதியாரை போற்றும் வகையில், ‘காணி நிலம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அப்பல்கலைகழக வளாகத்திற்குள் பாரதியாரை நினைவு கூறும் வகையில் நினைவுத் தூண், அருங்காட்சியம், மண்டபம், பாரதியாரின் படைப்புகள் கொண்ட நூலகம், பூங்கா, குயில் தோப்பு, பாரதியார் எழுதுவது போன்ற சிலை, ஓவியங்கள் ஆகியவை இடம் பெற உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பம்சமாக மகாகவி பாரதியார் இயற்றிய குயில் பாட்டை அடிப்படையாகக் கொண்டு ’குயில் தோப்பு’ அமைக்கப்பட்டு வருகிறது. அப்பாடலில் இடம் பெற்றுள்ள சூழலை காட்சிப்படுத்தும் பணியில், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மரம் அறக்கட்டளை செய்து வருகிறது. குயில் தோப்பில் குயில் பாட்டில் இடம் பெற்றுள்ள அனைத்து மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி அரியவகை மரங்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட வகையான மரங்கள் நடவு செய்யப்பட உள்ளன. அங்கு பழைய கால முறைப்படி கதவு, திண்ணை கொண்ட ஒரு குடில் அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு கிணறு, பறவைகள் வந்து செல்லும் வகையில் குளம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பேசிய மரம் அறக்கட்டளை நிறுவனர் யோகநாதன் கூறுகையில், “மகாகவி பாரதியார் மிகப்பெரிய கனவு குயில் தோப்பு. அதனை காட்சியாக உருவாக்கி வருகிறோம். அந்தப் பாடலில் உள்ள சவுக்கு, மா, தென்னை, பனை, வேங்கை உள்ளிட்ட அனைத்து மரங்களும் நடவு செய்யப்படும்.
பாரதியாரை அடுத்த தலைமுறை மக்களிடம் கொண்டு செல்லும் இது இதுவரை யாரும் செய்யாத முயற்சி. பாரதியார் உடன் வீட்டில் தங்கியிருந்த உணர்வையும், மகிழ்ச்சியையும் தரும் வகையில் இவை செய்யப்பட்டு வருகின்றன. குயில் தோப்பிற்கு வந்தால் பல வகையான மரங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். கோவையில் பொழுதுபோக்கு இடங்கள் குறைவாக உள்ள நிலையில், மக்கள் குடும்பத்துடன் வந்து செல்லும் வகையில் சுற்றுலாதலமாக இந்த இடம் மாறும்.
காடாக இருந்த இடத்தை சுத்தப்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மரம் நடும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. மரங்களை வளர்த்தெடுக்கும் பணிகள் 10 ஆண்டுகளுக்கு தொடரும்” எனத் தெரிவித்தார்.
கோவையை சேர்ந்த யோகநாதன், அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மரங்கள் மீது கொண்ட தீராக்காதலால், தனது பணிக்கு நிகரான நேரத்தையும், தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரங்கள் வளர்ப்பிற்கு செலவிட்டு வருகிறார். 36 ஆண்டுகளாக மரங்களை பாதுகாக்கும் பெரும் பணியை செய்து வருகிறார். இவர் இலட்சக்கணக்கான மரங்களை நடவு செய்ததோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்தும் வருகிறார். விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளை யோகநாதன் தொடர்ந்து செய்து வருகிறார். அடுத்த கட்டமாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சூழல் சார்ந்த சிறு நூல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்