“கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓய்வு இல்லை” – கோவையில் கைது பின்னரும் தொடரும் சத்துணவு–அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்...
போராட்ட களத்திலேயே சமைத்து சாப்பிடும் ஊழியர்களின் அவலம்

காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். காலை முதல் மாலை வரை வெயிலையும் பொருட்படுத்தாமல், அரசு அலுவலகங்கள் அருகே அமர்ந்து அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். போராட்டத்தின் போது பெண்கள் கும்மி அடித்து, ஒப்பாரி வைத்து, திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய காட்சிகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.
பந்தல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தங்களது கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும், அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த தொடர் போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஊழியர்கள் மதிய உணவை அதே இடத்தில் சமைத்து உண்டு, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, போராட்டம் நடைபெற்று வந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் திடீரென சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் எவருக்கும் பெரும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களால் அங்குள்ள ஊழியர்கள் சோர்வடைந்துள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.























