கோவை சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் உள்ள இந்திய ராணுவ வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு வளாக பூங்காவில் சறுக்கு விளையாட்டு விளையாடிய ஜியான்ஸ் ரெட்டி (6),  வியோமா பிரியா (8) ஆகிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “தற்போது கோவை மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரையிலான மழைப்பொழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்குவதற்கும், சுவர்கள் மற்றும் மின்சாரக் கம்பங்கள் உள்ளிட்ட கம்பங்களில் நீர்க்கசிவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.


அலட்சியம் கூடாது:


மழைக்காலங்களில் ஏற்படும் சேதாரங்களின் காரணமாக மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்து அதனால் மின் கசிவு ஏற்படும் அபாயமும், அதே போன்று நீர்க்கசிவுகளின் வாயிலாக மின்சாரக் கம்பங்களில் மின்சாரம் கசிந்து அதனால் மின்சாரத் தாக்குதல் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. அதே போன்று சரியாக பராமரிக்கப்படாத கட்டிடங்கள், இடிபாடுகளுடன் கூடிய கட்டிடங்கள், காய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் ஆகியவையம் மழைக்காலங்களில் மேலும் சேதமுற்று கீழே விழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.


கேட்டட் கம்யூனிட்டிகளில் வசிப்பவர்கள் தஙகளது குடியிருப்புகள், குடியிருப்பில் உள்ள மின்மாற்றிகள், பூங்காக்கள் மற்றும் பிற கட்டிடஙகளில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா? அல்லது இணைக்கப்பட்டுள்ளதா? என்பதையும், மின்சார வயர்கள் சேதமின்றி உள்ளதா என்பதையும், மழைக்காலங்களின்போது மின் கசிவு ஏற்படும் வாய்ப்பை தவிர்ப்பதை உறுதிசெய்யும் பொருட்டு தஙகளது அசோசியேஸன் மூலமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரிசியன்கள் அல்லது மின்சார வாரிய ஊழியர்களைக் கொண்டு அவ்வப்பொழுது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அலட்சியம் கூடாது.




உங்களது வீடுகளில் உள்ள மின்சார இணைப்புகளை ஒருபோதும் ஈரக் கைகளால் தொடாதீர்கள். மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைநேரங்களில் மின்சாதனப் பொருட்களை தேவையில்லாமல் உபயோகப்படுத்த வேண்டாம். மின்சாதனப் பொருட்களை உபயோகித்த பின்னர், மின் இணைப்பிலிருந்து துண்டித்து வையுங்கள். ஈரப்பதம் உள்ள இடங்களில் மின் இணைப்பிற்காக எக்ஸ்டென்சன் கார்டுகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். அதே போன்று ஈரப்பதம் உள்ள சுவர்களில் இருக்கும் பிளக் பாயிண்டுகளை உபயோகிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


ஜன்னல்களுக்கு அருகில் உள்ள பிளக்-பாயிண்டுகளில் மழை நீர் தெறித்து விடும் அல்லது புகுந்துவிடும் வாய்ப்பு உள்ளதால், மழை நேரங்களில் ஜன்னல்களை மூடி வையுங்கள். உங்கள் வீடுகளில் மின்சாரப் பழுது தொடர்பான பிரச்சனை வந்தால், அதை முறையாக மின்சார வாரிய ஊழியர் மூலமாகவோ அல்லது பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் மூலமாக சரிசெய்யுங்கள். நீங்களே தன்னிச்சையாக சரி செய்ய முயலாதீர்கள். சுவர்களிலும், மேற்கூரைகளிலும் ஈரப்பதம் இருந்தாலோ அல்லது மழை நீர்க்கசிவு ஏற்பட்டாலோ அதை உடனடியாக சரிசெய்யுங்கள்.


கூடுதல் கவனம் தேவை


வெளியிடங்களுக்கு செல்லும்போது ஈரப்பதம் உள்ள சுவர்கள் மற்றும் மின் கம்பஙகள் ஆகியவற்றை தொடுவதை கட்டாயம் தவிர்க்கவும். மழைக்காலங்களில் அல்லது தரையில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சமயங்களில் மின்சாரக் கம்பங்களுக்கு அருகில் செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் கூடும் பூங்கா போன்ற இடங்களில் உள்ள மின்சாரக் கம்பங்கள் அல்லது மின் இணைப்புகள் போன்றவற்றின் அருகில் செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்.


உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இடங்கள் அல்லது வேறெங்கேனும் மின்சாரப் பழுது தொடர்பாக பிரச்சனை எதையேனும் காண நேரிட்டால், அது குறித்த தகவலை உடனடியாக மின்சார வாரியத்திற்கு தெரிவியுங்கள். சாலையோரங்களில் மின்சார பராமரிப்பு பணிகளோ அல்லது சாலைப் பராமரிப்பு பணிகளோ நடைபெற்றிருந்தால், அப்பகுதிகளில் சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும் வாய்ப்பு இருக்கக்கூடும். எனவே. அத்தகைய பகுதிக்கு செல்லும்போது கூடுதல் கவனம் செலுத்தி செல்ல வேண்டும்.


உங்கள் பகுதிகளில் ஏதேனும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தாலோ, மரம் ஏதும் விழும் நிலையில் இருந்தாலோ அல்லது மரக்கிளைகள் எவையேனும் காய்ந்து விழும் நிலையில் இருந்தாலோ அது குறித்த தகவலை மாநகராட்சி அல்லது உங்களது பகுதி கவுன்சிலருக்கு தெரிவித்து, அவற்றை அப்புறப்படுத்த உதவலாம். மழைபெய்யும் பொழுது பழுதான கட்டிடத்தின கீழோ அல்லது மரத்தின் அடியிலோ ஒதுங்க வேண்டாம். மழைக்காலங்களில் வெளியில் செல்லும் போது வெள்ளம் தேங்கிய பகுதிகளின் ஊடாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் வெளியில செல்லும்பொழுது மின்சார தாக்குதலை தவிர்க்கும் பொருட்டு இரப்பர் காலணிகள் அல்லது இரப்பர் பூட்ஸ்களை உபயோகிப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளனர்.