மேட்டுப்பாளையத்தில் இளைஞர் மீது மோதிய சுற்றுலா பேருந்து ; சாலையோரத்தில் தூக்கியெறிந்து சென்ற கொடூரம்

கோவையில் விபத்தில் அடிபட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல் சாலையோரத்தில் தூக்கியெறிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Continues below advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே கடந்த 13 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் வாலிபர் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இது குறித்து பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ஆசிப் என்பவர் மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வாலிபரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த வாலிபர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர் மீது ஏதோ ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது விசாரணையில் தெரியவந்தது.

Continues below advertisement

விபத்து ஏற்படுத்திய சுற்றுலா பேருந்து

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த வாலிபர் யார்?, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என விசாரணை செய்து வந்தனர். மேலும் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தனியார் பேருந்து ஒன்று அந்த வாலிபர் மீது ஏறி இறங்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் காவல் துறையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து அந்த காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் மீது ஏறி இறங்கிய சுற்றுலா பேருந்து சாம் டிராவல்ஸ் என்பதும், அந்த பேருந்து தினசரி பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. பேருந்தில் அடிபட்டு வாலிபர் கீழே விழுந்ததும் டிரைவர் சிவராஜ் மற்றும் உதவியாளர் ஆகியோர் அந்த வாலிபரை ஓரத்தில் படுக்க வைத்து விட்டு ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது தெரியவந்தது. விபத்தில் அடிபட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல் சாலையோரத்தில் தூக்கியெறிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிசிடிவி  கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டுநர், உதவியாளர் கைது

இதனையடுத்து பேருந்து ஓட்டுனர்  மற்றும் கிளீனர் ஆகியோர் ஊட்டியில் சுற்றுலா பேருந்தை நிறுத்தி விட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. மேலும் ஊட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காவல் துறையினர் மேட்டுப்பாளையம் காவல் நிலைய வளாகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளரை மேட்டுப்பாளையம் காவல் துறையினர் இன்று கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்தில் அடிபட்டு இறந்த வாலிபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola