கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலை மாற்றி எடுத்துச் சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (65). இவர் உடல் நலக்குறைவாக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். அவருடைய உடல் மாலை பிரேத பரிசோதனைக்கு பிறகு தருவதாக உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவரிடம் உயிரிழந்த மணியின் உடல் மாறுதலாக நேற்று மாலை எடுத்துக் கொடுக்கப்பட்டாதாக தெரிகிறது. அவர்களும் உடலை வாங்கிக் கொண்டு சென்று விட்டனர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு உடல் மாற்றி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், திருப்பூரை சேர்ந்தவர்கள் தவறுதலாக வாங்கிக் கொண்டு சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்களுடைய செல்போன் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பட்டது. சம்பவம் குறித்து பந்தய சாலை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் உடல்கள் மாற்றி கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதே சமயம் ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலையிலிருந்து நேற்று காலை 12 மணி வரைக்கும் உடலை வாங்குவதற்கு காத்திருந்தனர். ஆனால் மாறுதலாக உடலை எடுத்துச் சென்றவர்கள் தங்களுடைய தந்தை என இறுதி சடங்கு நடத்தி இருப்பது தெரியவந்தது. பின்னர் இரு தரப்பினரிடமும் காவல் துறையினர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இருவரும் ஒரு உடலமைப்புடன் இருந்ததும் வயதானவராக இருந்தால் சரியாக அடையாளம் காண முடியாதவில்லை எனவும், தனது தந்தை என எண்ணி இறுதிச்சடங்கு நடத்தி விட்டோம் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு தரப்பு உடலுக்கு பதிலாக தகனம் செய்து கொண்டு வந்த அஸ்தியை வாங்கிக்கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உடலை மாற்றி கொடுத்து விட்டதாகவும் வீட்டில் இருந்து இன்று காலை வரை காத்திருந்தும் எங்கள் தந்தையின் உடல் கொடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும் போது, உடல் மாற்றி கொடுக்கப்பட்டு சம்பவம் உண்மைதான். இரண்டு பேருடைய உடல் அமைப்பு ஒரு மாதிரியாக அடையாளங்கள் இருந்தால் இந்த தவறு நடந்திருப்பதாகவும், ஆனால் உடலை வாங்கிச் சென்றவர்கள் சரியாக கவனிக்காததால் இந்த தவறு நடந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய அடையாளங்களை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்கள் மாற்றி எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.