கோவையில் போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (20). இவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க பெற்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற போதை மீட்பு மையத்தில் கிஷோரை சிகிச்சைக்காக பெற்றோர்கள் சேர்த்துள்ளனர்.


மாணவர் உயிரிழப்பு


கடந்த சில நாட்களாக கிஷோருக்கு, அங்கு வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் மருத்துவர் ஜெப பிரசன்னா ராஜ் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முறைகள் கடுமையாக இருந்ததாலும், போதையில் இருந்து மீள முடியாமல் கிஷோர் தவித்து வந்ததாலும், வீட்டிற்கு செல்ல வேண்டுமென கூறி அடம்பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு மைய ஊழியர்கள், நேற்று கிஷோரின் கை, கால்களை கட்டி அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். அப்போதும் அவர் அதிக கூச்சலிட்டதால், அவரது வாயில் துணியை வைத்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் மாணவர் கிஷோர் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போதை மீட்பு மையத்தின் நிர்வாகிகள் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பாளையம் காவல் துறையினர் கிஷோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


5 பேர் கைது


தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிகிச்சையின் போது மாணவர் உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து சிகிச்சை மையத்தின் வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் மருத்துவர் ஜெப பிரசன்னா ராஜ் மற்றும் திருச்சூர் மாவட்டம் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மேஜூ ஜான், ஊட்டியைச் சேர்ந்த சந்தோஷ் புதுக்கோட்டை மாவட்டம் மணிகண்டன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் தலைமறைவாக உள்ள அந்த மையத்தின் உரிமையாளர் ஜோசப் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த மையத்தில் மேலும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த 30 பேரையும் வேறு மையத்திற்கு மாற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதை மறுவாழ்வு மையத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.