கோவை மாவட்டம் காளப்பட்டி காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. 25 வயதான இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த நிலையில் இவர் நேற்றுமுன் தினம் காலை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பேருந்தை ஓட்டிச் சென்றார். பின்னர் அன்று இரவு 9.30 மணி அளவில் கருப்பசாமி பேரூர் - சிறுவாணி சாலையில் உள்ள பச்சாபாளையம் அருகே தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கொண்டு வந்து, தனியார் பேருந்தை நிறுத்தினார். அங்கு மேலும் 2 தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இரவு பேருந்துகளை நிறுத்தியதும், அந்த தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வழக்கம் போல அங்கேயே படுத்து தூங்கி உள்ளனர். இதில் டிரைவர் கருப்பசாமி தான் ஓட்டி வந்த தனியார் பேருந்தின் கீழே பாய் விரித்து படுத்து தூங்கியுள்ளார். பின்னர் நேற்று காலையில் பணிக்கு செல்வதற்காக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எழுந்தனர்.


சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு


அப்போது உடனிருந்தவர்கள் கருப்பசாமியையும் எழுப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் அசந்து தூங்கியதாக தெரிகிறது. இதற்கிடையே மற்ற தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் குளித்து தயாராகி பணிக்கு புறப்பட்டனர். அதில் காலை 6.10 மணிக்கு ஒரு தனியார் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து கருப்பசாமி ஓட்டும் தனியார் பேருந்தை நேற்று ஓட்ட வேண்டிய மற்றொரு ஓட்டுநரான சூர்யா என்பவர் அங்கு வந்தார். அப்போது அந்த பேருந்தின் நடத்துநர் மகேஷ்குமார் தன்னிடம் இருந்த டிக்கெட்டுகளை சரி பார்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே ஓட்டுநர் சூர்யா, பேருந்திற்கு கீழே கருப்பசாமி படுத்து இருப்பதை கவனிக்காமல் பேருந்தை முன்னோக்கி இயக்கினார். அப்போது பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய கருப்பசாமி கண் இமைக்கும் நேரத்தில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டுநர் சூர்யாவை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பேருந்து சக்கரத்தில் சிக்கி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.