மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொது மக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொது மக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மின்பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழக நிறுவனம், மாநில மின்சுமைப் பகுப்பு மையம் ஆகியவற்றின் மின்கட்டண விகித திட்டத்தின் படி 2022-23 முதல் 2026-27 வரைக்கான மின் கட்டணம் மற்றும் இதர கட்டணம் நிர்ணயித்தல் ஆகிய மனுக்களின் மீது பொது மக்களிடையே கருத்து கேட்பு கேட்கப்படுகிறது.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் துறையினர், சிறு குறு தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை முன் வைத்தனர். மேலும் அவர்களது மனுக்களையும் பதிவு செய்தனர். இதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி, இயக்குனர் சீனிவாசன், பிரபாகரன், மனோகரன் ஆகியோர் கருத்துக்களை கேட்டறிந்து பதிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய தொழில் அமைப்பினர் மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும், மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், “பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா பொது முடக்கம், நூல் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் மின் கட்டண உயர்வு என்பது சுமையாக இருக்கும். அதன் காரணமாக மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறி தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய டாக்ட் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ், “கடந்த 3 வருடங்களாக சிறு, குறு தொழில்கள் முடங்கிய நிலையில் உள்ளது. ஏற்கனவே சொத்து வரி உயர்வினால் தொழில் துறையினருக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் சிறு, குறு தொழில்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும்.
பெரும்பாலான குறுந்தொழில் கூடங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. ஒரே மின் இணைப்பு மூலம் மின்சாரம் பெற்று சப் மீட்டர் பயன்படுத்தி வருவதால் அதிக மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். பீக் ஹவர்களில் கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், தொழில் நடத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் கோவையில் முக்கியத் தொழிலாக உள்ள மோட்டர் பம்புசெட், வெட் கிரைண்டர் உள்ளிட்டவை உற்பத்தியில் கோவை தொழில் முனைவோர் பிற மாநிலங்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மின் கட்டண உயர்வை இரண்டு ஆண்டுகளுக்கு கைவிட வேண்டும். தற்போதுள்ள மின் கட்டண முறைகளே இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதேபோல தொடர்ந்து பேசிய தொழில் அமைப்பினரும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் சென்னைப் பகுதிகளிலும் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்த உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்