இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Continues below advertisement

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமி நடனப்பள்ளியின் மாணவிகள் இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றனர். இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

வெற்றியுடன் கோவை திரும்பிய மாணவிகளை அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நடனக் கலை ஆர்வலர்கள் ரயில் நிலையத்தில் பொன்னாடை அணிவித்து, மலர் மாலைகள் சூட்டி வரவேற்றனர். இதனால் ரயில் நிலையம் விழாக்கோலமாக காட்சியளித்தது.

Continues below advertisement

இதுகுறித்து ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமியின் நிறுவனர் சுபா வசந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியப் போட்டியிலும் எங்கள் மாணவிகள் பங்கேற்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்த போட்டியாளர்களுடன் இணைந்து திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகள் பாராட்டுகளை பெற்றனர்” என்றார்.

மேலும், சமூக வலைதளங்களில் தகவல்களை அறிந்து கொள்வதை விட பல்வேறு நாடுகளின் மக்களுடன் நேரடியாக பழகி அனுபவங்களைப் பெறுவது மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றும், இந்தியாவின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தை உலக அரங்கில் கொண்டு சென்றது பெருமைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.

மாணவிகளின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.