கிராம சபை புகார்கள் காற்றில் கரையுதா.? குப்பை தீயில் கருகும் கோவை பட்டணம் மக்கள்...!
கோவை – பட்டணம் பகுதியில் பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம்

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை முறையாக தரம் பிரிக்காமல் தினசரி பொதுஇடங்களில் கொட்டப்படுவதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கிராமம் முழுவதும் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் அவதி
குறிப்பாக, வாசுதேவன் கோவில் பின்புறம் பகுதியில், கிராம நிர்வாகத்தின் சார்பில் குப்பைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை உரிய முறையில் அகற்றாமல் அதே இடத்தில் தீயிட்டு எரிப்பதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காற்று மாசு அதிகரித்து, சுவாசிக்க முடியாத சூழல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. i இதனால் எப்போதும் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் குப்பை
குப்பைகளை எரிப்பதால் வெளியேறும் புகை மற்றும் நச்சு வாயுக்கள் காரணமாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, கிராம சபை கூட்டங்களில் பலமுறை புகார் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவிதமான நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் கிராம நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எனவே, கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பட்டணம் கிராமத்தில் குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்து, அறிவியல் முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுஇடங்களில் குப்பைகளை எரிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் பொதுசுகாதாரத்தை பாதுகாக்க உரிய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.






















