Crime : கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது ; 17.5 சவரன் நகை , இருசக்கர வாகனம் பறிமுதல்

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 17.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

கோவை புறநகர பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 17.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் பிரின்சஸ் (49) என்பவர் கடந்த மாதம் 12 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனை பார்க்க சென்றார். பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 8½ சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரின்சஸ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொள்ளை கும்பல் கைது

மேலும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ரோகன் (24), விஜய் (26), அபிலேஷ் (29) மற்றும் முபாரக் அலி (29) ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் சூலூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், மற்றும் பல்லடம் பகுதிகளில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பல்லடம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தையும் திருடிய இந்த கும்பல், வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு அவரது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது.

இதுகுறித்து  ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்து தனது வாகனத்தை அடையாளம் கண்ட விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து, கொள்ளையர்களை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.

Continues below advertisement