கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி ..பி. காலனி. இப்பகுதி மாநகராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதி மற்றும் சத்துணவு வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது.





இந்த பள்ளியில் சத்துணவுக் கூடம் இருந்த போதும், அங்கு உணவு சமைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு அருகேயுள்ள கல்வீரம்பாளையம் துவக்கப் பள்ளியில் சமைக்கப்படும் சத்துணவு ஆட்டோவில் கொண்டு வரப்படுகிறது. அப்படிக் கொண்டு வரப்படும் சத்துணவும் சுகாதாரமற்ற முறையில் கொண்டு வரப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் புகார் அளித்தாலும் முறையான பதில் அளிப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.




பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் நிரப்படாமல் காலியாக இருப்பதாகவும், போதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை எனவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க், தண்ணீர் தொட்டி ஆகியவை மூடப்படாமல் இருப்பதால், மாணவர்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை எனவும், கழிப்பறை உள்ள பகுதியில் புதர் மண்டிக் கிடப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.




செப்டிக் டேங்க அருகேயுள்ள கட்டிடம் பழுதடைந்து சாய்ந்த நிலையில் இருப்பதாகவும், பள்ளி சுற்று சுவர் விரிசல் அடைந்து கிடப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், “மாணவர்களுக்கு சத்துணவு கொண்டு வர மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஆட்டோவிற்கு பெற்றோர்கள் கொடுத்து வருகிறோம். உணவு கொண்டு வரும் பாத்திரமும் பெற்றோர்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். சுகாதாரமற்ற முறையில் சத்துணவு கொண்டு வரப்படுகிறது. முறையான மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறப்படுவதில்லை. மாணவர்கள் தான் சக மாணவர்களுக்கு உணவு பரிமாறும் நிலை உள்ளது.




கழிப்பறை வசதியில்லை. பள்ளி வளாகத்தில் திறந்திருக்கும் தொட்டிகளால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கட்டிடங்கள் விரிசல் அடைந்துள்ளன. குழந்தைகள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனத் தெரிவித்தனர்.