கோவை மாவட்டத்தில் 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய்கள் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிகளை செயல்படுத்தும் உரிமையை, இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் 230 கி.மீ. தூரத்துக்கு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.




இதன்படி கோவை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோவை மாநகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சாலையில் சாலையோரமாக எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தது. எரிவாயு குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்ய காற்று மற்றும் தண்ணீர் கொண்டு பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் காலையில் இருந்து அப்பகுதியில் தண்ணீர் கொப்பளித்து வந்துள்ளது.




இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் பரிசோதனை செய்தனர். அப்போது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டது.. அப்போது எதிர்பாராத விதமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் குழி தோண்டப்பட்ட இடத்தில் பயங்கர சத்தத்துடன் குழாய் வெடித்து சிதறியது. இதனால் அடியிலிருந்த மண், குழாய், தண்ணீர் உள்ளிட்டவை 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது.



இந்த நிலையில் எரிவாயு குழாய் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் எரிவாய் குழாய் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நபர்கள், நின்ற படியே வேடிக்கை பார்த்தவர்கள் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது. அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடித் தப்பிய காட்சிகளும் பதிவாகியுள்ளது. அதேசமயம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இம்மாதிரியான பணிகளை மேற்கொண்டதால் இந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எரிவாயு குழாய் வெடிப்பிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில் குழாய் வெடித்து சிதறிய இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஆட்சியர், ”விளாங்குறிச்சி பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் பூமிக்கு கீழ் குழாய் பதிக்கப்பட்டு வரும் பணியின் போது, மழைநீர் மற்றும் சேறு அதிகமாக தேங்கி இருந்த காரணத்தால் சேற்றுடன் கூடிய நீர் வெளியேறியுள்ளது. சமூக வலைதளங்களில் குழாய் வெடிப்பு, தீ என தவறான செய்தி பரவி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண