'கோவை 42 பவுன் நகை கொள்ளை வழக்கு' - வட மாநில கொள்ளையனை பிடிக்க களத்தில் 3 ஸ்பெஷல் டீம்கள்...
போலீசாருக்கு டிமிக்கு கொடுத்த வட மாநில கொள்ளையன். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை.

கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து வீடுகளின் கதவை உடைத்து 42 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் பிடிப்பட்ட கொள்ளையன் கோவையில் இருந்து மதுரை அழைத்து சென்றபோது தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இர்பான், கல்லு ஆரிப், ஆசிப் என்பதும் அவர்கள் கோவைப்புதூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்தனர். அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக 3 பேரும் சுட்டு பிடிக்கப்பட்டனர். இதில் அசிப் என்பவர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பர்ஹான் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, பர்ஹானை மதுரையில் உள்ள குண்டர் தடுப்பு சட்ட ஆணையத்தில் ஆஜர் படுத்த கோவை காவல்துறையினர் கடந்த மூன்றாம் தேதி அழைத்து வந்துள்ளனர். அப்போது, நாகமலை புதுக்கோட்டை அருகே உணவு வாங்க சென்ற போது காவல் வாகனத்தில் இருந்து பர்ஹான் தப்பியுள்ளார்.
3 தனிப்படைகள் அமைப்பு
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி காட்சிகளை வைத்து பர்ஹானை தீவிரமாக தேடி வருகின்றனர். பர்ஹான் வட மாநிலத்திற்கு தப்பி செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கோவை காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பர்ஹானை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.























