நள்ளிரவில் கோவையில் திகில் சம்பவம்... அலறி ஓடிய காட்டு யானை...
கோவையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒற்றை காட்டு யானை. குரைத்து எச்சரித்த நாய்.

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடை – வரப்பாளையம் பிரிவு பகுதியில் நள்ளிரவில் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியிலிருந்து உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற ஒற்றை காட்டு யானை, ஒரு வீட்டிற்குள் புக முயன்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடு இரவில் வீட்டை சுற்றிய காட்டு யானை
அப்பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டிற்கு, நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. உணவு கிடைக்குமா என்ற நோக்கில், வீட்டின் முன்புறம் நின்று உள்ளே நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அச்சமயம் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
நாய்களின் குரல் சத்தத்தை கேட்டு விழித்துக் கொண்ட வீட்டு உரிமையாளர் உடனடியாக வீட்டின் வெளிப்புற விளக்குகளை ஏற்றியுள்ளார். திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தைக் கண்டு அச்சமடைந்த காட்டு யானை, வீட்டிற்குள் நுழையாமல் பின்னால் சென்று, அருகில் இருந்த செடிகள் மற்றும் புதர்களை சாப்பிட்ட பின்னர் மீண்டும் வனப்பகுதியை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முழு சம்பவமும் கார்த்திகேயன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, நாய் குரைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாய் குரைத்ததும் ஓட்டம் ஓடிய யானை
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வனப்பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், வனவிலங்குகள் மனித வசிப்பிடங்களை நோக்கி வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், வனத்துறையினர் வனப்பகுதிகளிலேயே காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மனித-வனவிலங்கு மோதல்களைத் தவிர்க்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.























